வேகமாகச் சென்று பொருந்தும்படி பயிலின், பயின்றார்க்குக் காலன் செயலாகிய இறப்பில்லை. உச்சித்தொளை வாயிலும் திறந்திடும். உலகம் அறிய நரை திரை முதலிய உடல் தன்மைகள் மாறிவிடும். முழுமுதற் சிவத்தின் ஆணையாகும் இது. பராநந்தி - முழுமுதற் சிவம். (அ. சி.) அணா - அண்ணாக்கு. (7) 786. நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.1 (ப. இ.) முழுமுதற்சிவம் காட்டும் ஆசானாக; அவன் காட்டிய வழியே உள்நாக்கினை மேலே ஏறிட்டு அடைத்து இருந்தால் நெடுநாள் உலகினை ஆளலாம். வலமூக்கின் வழிவரும் உயிர்ப்பு நெற்றியமிழ்து முற்றாதபடி தடைப்படுத்தும். அத் தடை நீங்கி வெளியாகும்படி இடையறாது எண்ணுமவர்க்கு எளிதாக மேலது கைகூடும். இப் பயிற்சியிலாதார் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர். முதலாக - ஆசானாக. (அ. சி.) பந்தி...பகலோன் - அமுதம் பெருகாதபடி அதனைத் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் சூரியகலை அல்லது பிங்கலை. (8) 787. தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை யாடிய தீங்கரும் பாமே. (ப. இ.) பாவச் செயல்களைச் செய்ததனால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டுத் திகைப்புற்றிருந்தவர், நாவின் நுனியால் உண்ணாக்குத் தொளையை அடைக்கும் பயிற்சியாகிய கேசரியோகத்தைப் பயின்றால் நெடுநாள் வாழ்வர். அவர்களிடத்து நமனுக்கு வேலையில்லை. செந்தமிழ் மறைப்பாட்டினை ஆராய்ந்து இடையறாது ஓதி அதன் முழுப் பயனையும் மேற்கொண்டவர் சிவத்துடன் கூடிப் பேரின்பமுறுவர். பாவினை - திருமறைத் திருப்பாட்டை. பயனற - (அறபயன் என்பன முன்பின்னாகத் தொக்கன.) முழுப்பயனையும். (அ. சி.) தீவினையாட - தீய கருமங்களாலே. நாவினை நாடில் - நாவின் நுனியை அண்ணாக்கில் சிவிறிடில் (இதுதான் கேசரி யோகம்). பாவினைப் பாடி - மறைப்பாட்டுக்களைப் பாடி தேவினை - நன்மைதரும் கருமங்களாலே. (9) 788. தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
1. ஊரிலா. அப்பர், 5. 97 - 7.
|