(ப. இ.) ஓங்காரமானது கொப்பூழின் கீழிடத்தாய மூலத்திடத்ததாம். எஞ்ஞான்றும் சிவனைவிட்டு நீங்காது அச் சிவனே தானாம் வனப்பாகிய திருவருள் எழுத்து வகரம். அது கழுத்தினிடத்ததாகும். ஆருயிர்களைப் பண்படுத்தும் நடப்பாகிய ஆதியருள் நகரம். அது நெற்றியினிடத்ததாகும். மிக்க பெருமையையுடைய ஒளியாகிய விந்து அதற்கும் மேலதாகும். ஓசையாகிய நாதம் அதற்கும் அப்பாலாகும். வீங்காகும் - பெருமையுடையதாகும். (அ. சி.) ஓங்காரம் உந்திக்கீழ் - மூலாதாரத்தில் பிரணவம். வகாரம் நீள்கண்டம் - கண்டத்தானத்தில் வ எழுத்து. பாங்கார் யகாரம் பயில் நெற்றி - புருவ மத்தியில் ய எழுத்து. (10) 989. நமவது வாசன மான பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமவற வாதி நாடுவ தன்றாஞ் சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே (ப. இ.) சிவக்கொழுந்தாகிய சிவலிங்கத்தின் இருக்கையாகிய ஆவுடையார், நம என்னும் எழுத்துக்களாகும். அவ்விருக்கை உயிரே. (உயிர் அடையாளம் ய.) ஆவுடையார்க்கு மேலுள்ள தூண் ஒத்துக் காணும் ஒளிப்பகுதி சிவ என்னும் எழுத்துக்களாகும். இச் சிவமே வேண்டும் சித்திகளை அருள்வதாகிய இறையாகும். இறை - பதி. நம என்னும் எழுத்துக்களுக்குரிய உலகியல் நீங்குதலும் ஆதியாகிய நடப்பாற்றலை நாடுவதாகிய சிந்தித்தல் இன்றாம் என்பது நமசிவய எனச் சிவம் பண்ணுவதின்று. சிவயநம எனக் கணிப்பது உண்டு. இதுவே முற்றப் பற்றறக் கழியும் வழியாகும். அதனால் பெறப்படுவது திருவடிப் பேறு. மாமோனம் - பெரிய விடுதலை. (அ. சி.) ஆசனம் - ஆவுடையார். (11) 990. தெளிவரு நாளிற் சிவஅமு தூறும் ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. (ப. இ.) திருவருள் துணையால் திரு அடியுணர்வாகிய தெளிவு வந்த காலத்துச் சிவ அமுதாகிய பேரின்பம் ஊறும். அப்பொழுது எட்டாகிய அகரத்தின்கண் ஆருயிர் ஒளி விளங்கும். அகர நிலையின்கண் இரண்டொலியுண்டானால் அருள் வெளியில் திகழும் முழுமுதற் சிவன் வெளிப்படுவன். இரண்டொலி: யகரம். இஃது உயிரடையாளம். இதன்கண் அகர ஒலியும் யகர ஒலியும் உள்ளன. நாதன் - சிவபெருமான். (அ. சி.) சிவ அமுது - சிவத்தின் இன்பம். எட்டில் உகளும் ஒளி - அகாரத்தில் விளங்கும் ஆன்மஒளி. (12)
|