(ப. இ.) முப்புரமாவது இரும்பு, பொன், வெள்ளி என்னும் மூன்று பொருள்களான் இயல்பாயமைந்த கோட்டை [இவற்றை மும்மல காரியம் (329) என்பர். மும்மலம்: ஆணவம், கன்மம், மாயை இவற்றை நிறமாகக் கொள்ளின் ஆணவம் இரும்பு, கன்மம் பொன், மாயை. வெள்ளி என்ப. முக்குண நிறத்தைக் கூறுங்கால் தலைக்குணம் வெண்மை என்றும், இடைக்குணம் பொன்மை என்றும், கடைக்குணம் கருமை என்றும் கூறுப] அக் கோட்டை யகத்துக் கருமை செம்மை வெண்மை என மூன்றுரு அம்மூன்றன் கண்ணும் திகழும் ஓருருத் தன்மையள் குறித்த முந்நிறமும் தானே யானவள். கல்வியும் வாழ்வும் பேறும் தானாக நிற்பவள் அம் மூன்றையும் நல்கியருள்வன். போகம் - வாழ்வு. முத்தி - பேறு. 'நாகத்தணையானும் நளிர்மாமலரானும் போகத்தியல்பினாற் பொலிய' அருள்வதூஉம் திருவருளம்மையேயாகும். (அ. சி.) ஒருத்த - ஒடு உற்ற. (3) 1024 .நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரைஅபி ராமி அகோசரி புல்கு மருளுமப் போதந்தந் தாளுமே. (ப. இ.) குறித்த மூன்றையும் அளித்தருளும் அம்மை நாத நாதாந் தங்களாகிய முப்பத்தாறு மெய்களும் பரவி நிலைப்பதற்கு நிலைக்களமாகி மேலொளியாகும். மேலொளி - பரவிந்து. நிலவுலக முதலிய எல்லா அண்டங்களையும் படைத்தருளும் பரை. அழகும் விருப்பும் நிறைந்த அபிராமி. புலனுணர்வுக்கு எட்டாதவள். பொருந்திய அருளையும் அழகிய திருவடி யுணர்வையும் தந்தருளிக்காப்பவளாவள். ஆளும் - காக்கும். (4) 1025 .தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே1 (ப. இ.) நீருண்ட கரிய மேகம் போலும் அழகிய அம்மை திருவடியின்கண் சிலம்பணிந்தவள். செம்மைநிறம் பொருந்திய பட்டுடை உடுத்தவள். கச்சுப்பூண்ட மார்பினள். நான்கு திருக்கைகளிலும் முறையே கரும்பு வில்லும், பூவாளியும், அழகிய தோட்டியும், கயிறும் உடையவள். அழகிய திருமுடியும் உடையவள். சிறந்த மணி அழுத்திய குண்டலக்காதினையுடையவள். இத்தகைய வடிவமாக அம்மையை நினைக்க. நினைத்தல் - தியானித்தல். அங்குசம் - தோட்டி. பாசம் - கயிறு. கன்னல் - கரும்பு. வாளி - கணை. (அ. சி.) இது தியான உருவம் கூறியது, மலர்வாளி, கன்னல் வில், அங்குசம், பாசம் கொண்ட நான்கு கரங்கள். (5)
1.மின்தொத். திருக்கோவையார், 246.
|