1876. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. (ப. இ.) அளவிடப்படாத சிவஞானி திருவடிப்பேறாம் அருளை அடைந்தக்கால் அவர்தம் திருவுடலினை நிலவறையாகிய குகைசெய்து அவற்றின்கண் அமைத்தல்வேண்டும். அங்ஙனம் அமைத்தால் அறிவாற்றல்களால் மிக்க அழகுபெற்ற வேந்தரும் நிலவுலகத்துவலமும் நலமும் குலமும் சேர்மாந்தரும் முடிவிலாப் படியிலா வடிவுடை ஆரருள் இன்பம் பெற்று வாழ்வர். நிலவறை - சமாதி. (அ. சி.) குகை - நிலவறை. (4) 1877. நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து குவைமிகு குழவைஞ் சாணாகக் கோட்டித் தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே. (ப. இ.) நிலவறைப்படுக்கும் குகையின் அளவு வருமாறு: ஆழம் ஒன்பது சாண்; அகலமாகிய சுற்றளவு ஐந்து சாண்; மூன்று சாண் அகலத்தில் முக்கோணம். இத்தகைய முறைப்படி அமைக்கும் குகை தாமரை இருக்கையாகிய பதுமாசனமாகும். (அ. சி.) குகையின் ஆழம் அகலம் சாண் அளவில் கூறப்பட்டுள்ளது. (5) 1878. தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை நன்மலர்ச் சோலை நகரினற் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடங்களே. (ப. இ.) சிவஞானியின் திருமேனியினை நல்லடக்கமாகிய குகை அமைக்கும் நல்லிடங்கள் வருமாறு: அச் சிவஞானியின் திருவடிப்புணைசேர் மெய்கண்டார்தம் நல்ல வீட்டின் பக்கம், 'அளவில் சனம் செலவொழியாவழி' நடைச்சாலை அண்மை, 'அருளுடையார் உளமனைய தண்ணளிசேர்' குளங்கரை, அருள்வெள்ளப் பெருக்கனைய ஆற்றிடைக் குறை, நன்மலர்ச் சாலை, நகர்நாப்பண் பகர்நலமெலாம் வாய்ந்த மேடு, அருமைபெருமை மிக்க காடு, பெருவளஞ்சேர் தெருளுடையார் விழையும் மழைசார் திருமாமலைச் சாரல் என்பன. (அ. சி.) குகை செய்யும் இடம் கூறப்பட்டுள்ளது. (9) 1879. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாத நவபாத நேர்விழப் பொற்பம ரோசமும் மூன்றுக்கு மூன்றணி நிற்பவர் தாஞ்செயும் நேர்மைய தாமே.
|