841
 

(ப. இ.) மாயாகாரியமாகிய தம் உடம்பை மதிப்புக்குரிய பொருளென்று பலர் மதிப்பர். உண்மையாக நோக்கின் அவ்வுடம்பு பிணிப்புறுத்து மலமாகும். மலம் தள்ளத்தக்க பொருள். அதனால் உடம்பையும் மலம் என்று மதியாதவர் ஊமராவர். ஊமர் பேசும் வாய்ப்பு இல்லாதவர். மக்களாய்ப் பிறந்தும் மாவொத்துத் திரிகின்றனர். பிறப்பில் எண்பெருங்குற்றம் உளவென்ப. அவை வருமாறு :

"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளு மூமுஞ் செவிடும்
மாவும் மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதய மில்லென
முன்னு மறிந்தோர் கூறின ரின்னும்.

(புறம். 28.)

இவ்வெண்பெரும் குற்றத்து ஊமும் ஒரு குற்றம் ஆகும். இவ்வுடம்பைச் சிறப்பாகக்கொள்ளும் தலமாகிய உறையுளென்று தங்கினமையையே நலமென்று. சிலர் நாடியிருப்பர். அங்ஙனமிருந்தால், இங்குள்ள பலவேறு அண்டங்களில் வினைக்கீடாகிய பயனை நுகர்வதற்குத் தகுதியான உடம்பைப் பெறுவர். வேறு - சிறப்பு. இம்மை உடற்பிறவியின் பயன் அம்மையெய்துதலேயன்றி மீண்டும் இம்மையிற் பிறத்தலன்று.

(அ. சி.) தலம் ஒன்ற வேறு - வெவ்வேறு அண்டங்களில் பல வேறு வகைப்பட்ட உடல்களை.

(16)

2099. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் 1அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.

(ப. இ.) தூய நினைவும் மொழியும் செயலும் உடையார் உள்ளம் திருவுள்ளமாகும். அவ்வுள்ளத்தின்கண் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தூயோனாகிய சிவபெருமான் மெல்லநின்று விளையாடியருள்வன். உள்ளம் தூய்மை எய்துவது 'சிவசிவ' என்னும் தமிழ்மறையாலும் சிவனடியாரைப் பேணும் தவமுறையாலும் உண்டாம். அத்தகையோர் என்றும் 'செல்வன் கழலேத்தும்' செல்வராயிருப்பர். தீய நினைவும் சொல்லும் செயலும் உடையார் உள்ளத்தில் ஆண்டவன் விளக்கமுறான். அதனால் அவர்கள் என்றும் வறுமையுற்று மிக்க பசியினராய் மென்று தின்ன ஏதும் இரப்பினும் கிடையாராய்ப் பெருந்துன்பம் தாங்கியிருந்தாராவர். தரித்தார் - தாங்கியிருந்தார். வாக்குமனாதிகளைச் செலுத்துங் கருவிகள் மாயை ஆக்கமாகும். அக்கருவிகளைச் செலுத்தும் எழுத்துக்கள் வாக்காகும். அவ் வாக்குகளைச் செலுத்தும் தெய்வங்கள் இறைவன் திருவாணையாகும். கருவிகள் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு ஆள் என்பனவாகும். இவற்றை முறையே செலுத்தும் எழுத்துக்கள் ஒளி (விந்து,) மகரம், அகரம், உகரம், ஒலி (நாதம்) என்பனவாகும். இவற்றைச் செலுத்தும் தெய்வங்கள் முறையே ஆண்டான், அரன், அயன், அரி,


1.எண்ணில. சிவஞானபோதம், 4. 1 - 4.