அருமறையாம் உபதேச மொழியுடனும் சென்று காண்பார்க்குக் கருவிகள் ஒன்றும் தோன்றா. அதனால் திகைப்புற்றிருந்தாரை யொப்பர். (அ. சி.) நலம் தெரிந்து - நன்றாக ஆராய்ந்துகொண்டு. உள் இருபத்தைந்து - மண் முதல் தத்துவங்கள் 25. குறிவழி - குரு உபதேசம். திகைத்து - மயங்கி. (2) 2146. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூல மளவாக்கி அதீதத்துத் தாக்கிய வன்பான தாண்டவஞ் சார்ந்தது தேக்குஞ் சிவமாதல் ஐந்துஞ் 1சிவாயமே. (ப. இ.) நனவின் நனவினை முதற்கொண்டு பருவுடற்கண் உள்ள உச்சித்தொளையாகிய வெளிவரைநின்று அப்பால் அருள்வெளியின்கண் அருளப்பெறும் திருக்கூத்தினைக் கண்டு வழிபட்டு அதன்மேல் தூவா மெய்க்கண் காணப்பெறும் சிவமெய் ஐந்தும் உணர்வுறுவர். அத்தகையார்க்கு எல்லாம் சிவவண்ணமாய்க் காணப்பெறும். (அ. சி.) சாக்கிர சாக்கிரம் - சாக்கிரத்தில் சாக்கிரம். ஆதித்தலையாக்கி - முதற்கொண்டு. தூலம் அளவாக்கி - தேகத்தின் உச்சிவரை செலுத்தி. அதீதத்து - துரியாதீதத்தில். அன்பான தாண்டவம் - சிவத்தின் கருணைநிறைந்த கூத்து. சிவம் ஆதல் ஐந்தும் - சிவ தத்துவங்கள் ஐந்தும். சிவாயமே - சிவமயமே. (3) சுத்த நனவாதி பருவம் 2147. நனவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி தனதா முயர்விந்து தானின்று போந்து கனவா நனவிற் கலந்ததிவ் வாறே. (ப. இ.) நனவு முதலாகச் சொல்லப்படும் பருமைப் பகுதியே நுண்மையாம் பகுதியும், அத்தன்மையவாகிய இருபத்தைந்து மெய்களும் தூமாயை என்று சொல்லப்பெறும் மாமாயையினின்றும் போந்தனவாகும். அவற்றுடன் கலந்து தொழிற்படும் ஆருயிரின்நிலை தூநிலையாகும். அந்நிலை நனவிற் கனவுபோன்று காணப்பெறும். (அ. சி.) அனதான - அத்தன்மையதாகிய. விந்துவின் - மகா மாயையின். கனவா நனவு - நனவில் கனவு. (1) 2148. நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் 2நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவிற் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவிற் கனவோட னன்செய்தி யாமே.
1. சாக்கிரத்தே. சிவஞானசித்தியார், 8. 2 - 15. (பாடம்) 2. நகர்ந்தார்.
|