981
 

2411. நனவிற் கலாதியா நாலொன் றகன்று
தனியுற்ற கேவலந் தன்னில்தா னாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற் றிடத்தானே தற்பர மாமே.

(ப. இ.) நனவுக் காலத்தே உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள்மருள் என்னும் ஐந்தும் செயலுறாது அகல ஆருயிர்நிற்கும் நிலை தனிநிலை யாகிய புலம்பாகும். தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உள்ளது அப்பால் நிலையாகும். அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருள் சிவபெருமானாவன். அச் சிவபெருமான் திருவடியிணையினைத் திருவருள் நினைவால் கொள்ள அவ்வுயிர் தற்பரசிவமாய்த் திகழும். உழைப்பு முதலியவற்றை முறையே கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் கூறுப.

(அ. சி.) நாலொன்று - ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை. நேயந்தனை - சிவத்தை.

(6)

2412. தற்கண்ட தூயமுந் தன்னில் விலாசமும்
பிற்காணுந் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமுங் கலந்தற்ற
நற்பரா தீதமு நாடக ராதியே.

(ப. இ.) திருவருள் நினைவால் தலைவன்றன் உண்மையுணர்ந்து அதன்வாயிலாக ஆருயிர் தன் உண்மையினையும் உணரும். இதுவே தற்காண்டலென்ப. இந்நிலை மலமகன்ற நலமார் தூயநிலை என்ப. இதனைத் 'தூயம்' என ஓதினர். இதனை நின்மலாவத்தை எனவும் கூறுப. இந்நிலையில் ஆருயிர் பேருயிராகிய சிவபெருமானின் செறிவுடன் செறிந்திருப்பதால் தன் விரிவும் புலனாகும். செறிவு - நிறைவு; பரப்பு; வியாபகம். பின்பு மலம் கன்மம் மாயைகளை மீறி நிற்பதாகிய தூடணமும் உண்டாகும். தூடணம் - மீறிநிற்றல். தானும் முன்மலத்துடன் பிணிப்புற்ற நிலை பிறழ்வுறுதலாகிய நினைப்புமாறுதலை எய்தும். நினைப்புமாறுதலாவது முன் நிலைக்குமென்று நினைத்த உடல்கலன் உலகம் உணா இவை நிலையா என்னும் உண்மை நினைவு உண்டாதல். தற்பரன் என்பது தானே முழுமுதலென்பதாம். அவனே சிவபெருமான். அவனே காலங்கடந்த மேலோன். அவன் ஆருயிரைக் கலந்து நன்மைப் பாலாகிய நனிபெரும் மேலைநிலையாக்குவன். இதனை அகநாடுதலைச் செய்யும் ஆதிநிலையென்ப.

(அ. சி.) தூயம் - நின்மலத்துவம். விலாசம் - விரிவு. பராதீதம் - பரத்தில் அதீதம். தூயம் இஃதோர் அருஞ்சொல்.

(7)