990
 

செம்பொருட்டுணிவாம் சித்தாந்தத் திருநெறிக்கண் பெறப்படும் சிவகுருவின் திருவார்த்தையின்படி பயின்று ஒழுகிச் சென்றால் பேரொடுக்கத்தைச் செய்வதான விழுப்பொருட் சிவனாம் பராபரத்துத் தலைவன் தாள் தலைப்படுதலாகிய இரண்டறக் கலக்கும் ஐக்கியம் கைகூடும். பிரிப்பிலா ஒரு முடிவாய் ஒப்பிலா ஓரழகாய் இருபாதியென்று சொல்லப்படும் பெண்ணொரு கூறனாம் நண்ணரிய சிவபெருமான் திருவடியை நண்ணுவிக்கும். நேரந்தம் - சித்தாந்தம் பாரந்தம் - நிலமுதலாக அனைத்தையும் ஒடுக்கும் பேரொடுக்கம். ஓரந்தம் - ஒரு முடிவு; ஒப்பிலா அழகு. திருவார்த்தை - (183) உபதேசம்.

(அ. சி.) நெறிவழி - உபதேச முறையாக.

(4)

2431. தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடிற் பன்னா வுதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் 1தானன்றே.

(ப. இ.) துரியநிலையாகிய அருள்நிலத்தினைத் தொட்டே இருங்கள். தொட்டிருத்தல் என்பது ஓவாதுணர்வில் உணர்ந்திருந்தல். ஏனையார்க்கு எட்டாத நிலையிலுள்ளவனாயினும் உணர்வார்க்கு அவருணர்வில் எட்டும் ஒப்பிலா இறைவனைத் திருவருளால் உள்ளவாறு அறியுங்கள். அறிந்தால் பல்லும் நாவும் உதடும் பிறவும் கூடிப் பிறக்கும் தூயமாயாகாரியமாகிய சொல்லுக்கு எட்டாது நிற்குமவன் ஒப்பில்லாத மெய்ப்பொருளாகப் புணர்ந்து மெய்யின்பம் தந்தருள்வன்.

(அ. சி.) பட்டாங்கு - உள்ளவாறு. பன்னா - பல் + நா - பல்லும் நாவும் தட்டாதொழிவது - சொல்லுதற்கு இயலாது மேற்படுவது.

(5)

2432. மனவு நனவு கனவது புந்தி
நினைவி லகந்தை சுழுனையுள் நிற்றல்
அதனை அறிசித்தந் துரியமிம் மூன்றின்
நினைவறல் மற்றது நேயத் தளவே.

(ப. இ.) ஆருயிர்கட்கு நேரும் நனவு கனவு ஆகிய இரண்டு நிலையின்கண்ணும் உட்கலனாகிய மனம் புத்தி அகங்காரம் என்று சொல்லப்படும் மனம் இறுப்பு எழுச்சி என்னும் மூன்றும் நன்றாகத் தொழிற்படும். உறக்கத்தின்கண் அவ்வுறக்க நிலையினை மட்டும் அறியக்கூடிய சித்தமாகிய எண்ணமொன்று மட்டும் உளதாகும். நனவு கனவு உறக்கம் ஆகிய இம் மூன்றின் நினைவும் அற்று நிற்றல் அருள் நிலையாகிய துரியமாகும் அப்பால் நிலையாம் அருளோன் உடனாம்நிலை நேயமாகிய சிவபெருமானுடன் கலந்து நிற்கும் நிலை. இதுவே துரியாதீதநிலை.

(6)

2433. நனவின் நனவாதி நாலாந் துரியந்
தனதுயிர் தொம்பத மாமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.


1. எட்டுக்கொண் திருவுந்தியார், 24.