315
 

723. திருந்து தினமத் தினத்தி னொடுநின்று
இருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.

(ப. இ.) ஆகாநாள்கள்: பிறந்த கிழமை, நாள்மீன் (நட்சத்திரம்), பிறந்தநாள் மீனிலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று, எட்டாம்நாள் மீன்கள்.

(அ. சி.) நாள் - மீன்; நட்சத்திரம்.

(4)

724. மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே.

(ப. இ.) உடம்பினுள் புகுந்த உயிர்நிலை கூறப்படுகிறது. உடல் மெய் இருபத்துநாலு ஆள் ஒன்று ஆக இருபத்தைந்து மெய். இவற்றுடன் கூடிய வுயிர் பன்னிரண்டு விரல் உயிர்ப்புமுறையினால் தன்னையுணரும். அங்ஙனம் உணர்ந்தோர் உயிர்ப்பினை அடக்குவர். மூலம் முதலாகிய ஆறுநிலைகளையும் உணர்வர். கட்டுறுத்தும் வினை காணார். வெளிச்செல்லும் உயிர்ப்பு நான்கினாலேயே உயிர் நீங்கும். மெய் - தத்துவம்.

(அ. சி.) இருபத்தைந்து - ஆன்ம தத்துவம் 24 - ம் சீவனும். ஈராறு - பன்னிரண்டங்குல சுவாசம். அட்டு - விலக்கி. நாலே - நால்விரல் அளவுள்ள சுவாசம்.

(5)

725. நாலுங் கடந்தது நால்வரும்1 நாலைந்து
பாலங் கடந்தது பத்திப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்டு
ஆலங் கடந்ததொன் றாரறி வாறே.

(ப. இ.) உட்கலன் நான்கையும் செலுத்துவோர் நால்வர். உட்கலம்: அகங்காரம், புத்தி, மனம், எண்ணம் (சித்தம்). நால்வர் முறையே அயன், அரி, அரன், ஆண்டான் எனப்படுவர். நாலைந்து - ஒன்பது : சிவனிலை ஒன்பது. பத்திப்பதினைந்து - பதினஞ்சு பத்தி : தேய்பிறை வளர்பிறைகள். பாலம் - ஆணை. ஆலமுண்ட கண்டத்து அரனார் ஆறுநிலைகளின் திருவுருவமுங் கடந்து ஆவிகளுக்கு எண்குணம் அளித்து அருள்பவராவர். அகங்காரம் - எழுச்சி. புத்தி - இறுப்பு.

(அ. சி.) நாலும் - கரணங்கள் நாலும். நால்வரும் - பிரமனாதி நால்வரும். நாலைந்து - நவவடிவங்களும். பத்தி பதினைந்து - வளர்பிறை, தேய்பிறை நாட்கள் 15. ஆலங்கடந்ததொன்று - சிவன்.

(6)


1. எண்ணில. சிவஞானபோதம், 4. 1 - 4.