11. சாம்பவி மண்டலச் சக்கரம் 1273. சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாங் காண்பதந் தத்துவ நாலுள் நயனமும் நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே. (ப. இ.) சாம்பவி மண்டலச் சக்கரம் வரையும் முறைமையைக் கூறின் எட்டுவரை கீறுதல் அல்லது எட்டிதழ்த்தாமரை அமைத்தல் வேண்டும். அதன் சிறந்த பகுதியாகக் காணப்பெறுவன நான்காகும். அதன் கண் ஒளி ஓசை சிவை சிவம் (விந்து நாதம் சத்தி சிவம்) என்னும் நான்கு மெய்யும் காணப்பெறும். இந் நான்கனுள் கண்ணாகக் கருதப்படுவது விந்துவாகும். இந் நிலையினைத் திருவருள் துணையால் நாம் உணர்ந்து ஒழுகினபின் நாம் நாட்டவர்களால் நன்கறியப்படுவோம். நாடு - உலகம். (அ. சி.) பதம் - வரை. தத்துவம் நாலு - விந்து, நாதம், சத்தி, சிவம். நயனம் - விந்து. (1) 1274. 1நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக் கோடற வீதியுங் கொடர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நடுவீதி ஏடற நாலைந் திடவகை யாமே. (ப. இ.) நாடறிந்த சாம்பவி மண்டலமாகிய இக் குண்டத்து, திரிபு முதலிய வேறுபாடுகள் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகள் அமைத்துச் சிறந்ததாகக் காணப்படும் எட்டிதழ்நடுவிலுள்ள பதினாறு வீதிகளுள் இதழ்கள் அகல நான்கு மூலைகளும் அவற்றின் இடை இடம் நாலும் நடு இடமும் ஆம். (அ. சி.) கோடற - விகாரம் நீங்க. ஏடு - இதழ். (2) 1275. நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய் நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய் நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே. (ப. இ.) நாலு ஐந்து இடமாகவுள்ள அம் மண்டலத்து நாலுக்கும் நடுவீதியாகக் காணப்படும் இடம் அருட்குறி(லிங்கம்) வடிவமாயும், நான்கு கோணங்களிலும் நான்கு நான்கு இலிங்கங்களாகவும், ஆறு நிலைக் களங்களுள் நான்காவது நிலைக்களமாகிய நெஞ்சத்தில் ஆண்டவன் விளங்கித் தோன்றுவன். (அ. சி.) நாலு நற்பூ - அனாகதம். (3) (பாடம்) 1. நாடரி.
|