550
 

பதப்பேற்றின்கண் விருப்புற்றுத் தங்காமல், திருவடிப்பேற்றினர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவைந்தெழுத்தே செவியறிவுறூஉவாகிய உபதேசமாகும். அம் மெய்யுணர்வினைப்பெற்ற ஆருயிர் சிவபெருமானின் திருவடிப்பேற்றினைத் தலைக்கூடும். அதனால் அவ்வாருயிர்க்கிழவர் உண்மைச் சிவனாகவே இருப்பர். அவரே சுத்த சைவர் என்றழைக்கப் பெறுவர். சுத்தமெனினும், உண்மை எனினும், இயற்கை எனினும் ஒன்றே. இவரே மெய்கண்டாராவர்.

(அ. சி.) சிவன் உரை - சிவனால் சொல்லப்பட்ட. தானத்தில் - பதமுத்திகளில் முத்தர் - சீவன் முத்தர். பதப்பொருள் - கூறும் பொருள். முத்திவித்தாம். மூலம் - முத்திக்குக் காரணமாகிய மூலம். அடைந்ததற்றால் - அடைந்தால்.

(3)

1415. நானென்றுந் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.1

(ப. இ.) ஆருயிரானது உலகியல் தன்மையில் பிரியாப் பிரிவாக இருப்பதால் நானென்னும் நினைப்பும், சிவனைத் தான் என்னும் நினைப்புங் கொண்டு எண்ணி வாழும். அவ்வுயிர் மீளா அடிமையாகச் சாரவே தானென்றும் நானென்றும் எண்ணும் எண்ணம் தோன்றாமல் அதற்கு மலரும் மணமும்போலக் கலந்து ஒன்றாய்த் தோன்றும் சிவம் நானென்ற நினைவற்றுத் தானென்று மொழியும் உண்மையினை நல்கும். அப்படி நல்கியருளுதலால் தானென்றோ நானென்றோ காற்று மாற்ற மடங்கித் திருவடியின்பத்துய்ப்பாகவே ஆருயிர் நிற்கும். இதற்கு ஒப்பு: கற்கலுறு வாராசான் கல்லூரி நூல்தனையும், பொற்பினுடன் நாடுவர் புக்கதற்பின் - சொற் பொருள் நூல், கற்குஞ் செயலன்றிக் கண்ணார் எவையுமே, அற்புறு பேற்றின்கண்ணும் ஆம் என்பதே. கண்ணார் - கருதார்.

(அ. சி.) தற்பதம் - தான் ஆகிய பதம். நான் - ஆன்மா. தான் - சிவன்.

(4)

1416. சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

(ப. இ.) சொல்லவொண்ணாத இறைநிறைவில் அடங்குவதாகிய மெய்ம்மை கைகூடினால் தன்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும் திருவருளால். ஆருயிரின் வழிச்சென்று அடங்கிடும். அதன்பின் திருவடிப் பேருணர்வாம் விளக்கொளி ஒளிர்ந்து நிற்கும். நிற்கவே தானாதலாகிய பரசாயுச்சியப்பேறுபதியும், பரசாயுச்சியம் - உயர்வற உயர்ந்த ஒரு பெருநலம்.

(அ. சி.) தத்துவம் - தானென்றும் நானென்றும் இரண்டிலாத் தற்பதம். ஐந்து - புலன்கள் ஐந்தும்.

(5)


1. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.