551
 

5. சரியை
(சீலம்)

1417. உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.1

(ப. இ.) சிவபெருமான் அனைத்துயிரினும் உயிர்க்குயிராய் நிற்கும் உண்மையினை அவனருளால் கண்டுணர்தல் சிறந்த அறிவு வழிபாடாகும். அச் சிவன் உள்ளொளியாய் நின்று அறிவை விளக்கும் அவ் வுண்மை காண்டல் செறிவுவழிபாடாகும். புறத்திருவுருவின்கண் உயிர்க்குயிராய் நிற்கும் சிவபெருமானை ஆவாகனம் முதலாகச் சொல்லப்படுகின்ற அழைத்தல், இழைத்தல், குழைத்தலாகிய தொண்டினைத் திருமுறை வழியாகச் செய்யின் அது நோன்பு வழிபாடாகிய புறப்பூசையாகும். பூசைமுடிவில் மீட்டும் அச் சிவபெருமானை அகத்தே அமைத்தல் நுழைத்த லெனப்படும். 'அழைத்தல் இழைத்தல் குழைத்தல் நுழைத்தல், விழைவார் சிவபூசை வித்து.' அழைத்தல் - ஆவாகனம். இழைத்தல் தாபித்தல். குழைத்தல் - பிராணப் பிரதிட்டை. நுழைத்தல் - உத்வாகனம். இப் புறப்பூசை தலையன்பாற் செய்யப்படும். சிவபூசையாகும். கடைநேசம் - தலையன்பு. கடை : கடுத்தல்; மிகுதல்; தலை.

(அ. சி.) உயிர்க்குயிராய் நிற்றல் - எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி நிற்றல் (ஞான பூசை). உயிர்க்கொளி நோக்கல் - உயிரின் கண் ஒளியைக் கண்டு நிற்றல் (யோக பூசை.) உயிர் பெறும் ஆவாகனம் - தன் உயிரின்கண் உள்ள சிவத்தை வெளியிலுள்ள பொருள்களில் தாபித்துப் பூசித்தல் (கிரியா பூசை.)

(1)

1418. நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே.2

(ப. இ.) இதன்கண் சீலநெறி நிற்போர் திருத்தொண்டு ஓதப்பெறுகின்றது. சிவபெருமான் மெய்யடியார்கள் உய்யுமாறு ஆண்டாண்டு வெளிப்பட்டருள்கின்ற திருநாடு திருநகரம் திருக்கோவில் முதலியவற்றைத் தலையன்பால் தேடித்திரிந்து 'ஆலயம் தானும்அரனெனத் தொழுமே' என்றபடி இடையறாது தொழுவர். அங்ஙனம் தொழுவார்க்கு அகம்புறமாய் இன்றியமையாதன முறையே பாடுதலும் பணிதலுமாம். அங்ஙனம் செய்தார் நல்லுள்ளங்களைச் சிவபெருமான் திருக்கோவிலாகக் கொண்டருள்வன்.

(அ. சி.) இப் பாட்டில் சரியா பூசையைப் பற்றிக் கூறுகிறார்.

(2)


1. சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8. 2 - 8.

" விளக்கினார். அப்பர், 4. 77 - 3.

" நல்ல. 12. கணநாத நாயனார், 3.

2. பத்தராய்ப். ஆரூரர், 7. 39 - 10.

" தெண்ணிலா. 12. தடுத்தாட்கொண்ட, 107.