(ப. இ.) அருளால் ஆணவவல்லிருள் அற்றொழிந்த மெய்யடியார் உள்ளக் குறிப்பினுள் உலகவியல்பின் உண்மைத்தன்மை விளங்கும். நல்லாரால் வெறுக்கத்தகுந்த காரறிவாண்மையாகிய அறியாமை நீங்கினால், கருத்தாலியற்றும் விகிர்தனாகிய சிவபெருமானும் விளங்கி நிற்பன். திருவடியின்கண் உள்ளப்பிணிப்புடைய உணர்வின்கண் அச் சிவனை நன்றாக நாடினால், அறியத்தகுந்த சிவஞானத்துடன் விழையத்தகுந்த சிவவுலகத்துறைவர் 'விகிர்தன்' இச் சொல் தேவார திருவாசகங்களில் பலகால் வருகின்றது. (அ. சி.) குறிப்பினுள் - உள்ளத்திலே. வெறுப்பு இருள் - வெறுக்கத் தகுந்த அஞ்ஞானம். செறிப்பு உறு - பாசத்தைப் பொருந்திய. அறிப்பு உறு - அறிவு பொருந்திய. (3) 1764. தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி வானங்கள் பிஞ்ஞகன் எம்மிறை ஆர்ந்தறி வாரறி வேதுணை யாமெனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. (ப. இ.) ஒப்பில் ஒருவன் திருவருள் துணையால் முப்பொருள் உண்மையினை நானெறி வாயிலாய் ஐந்தெழுத்து முறைமையின் வைத்து ஆராய்ந்து உண்மை காணாது இதுகாறுங் காலங்கள் வீணாகக் கழிந்தன. அறியாமை நீங்கிய மெய்யன்புசேர் நல்லாரால் பின்னற் றிருச் சடையினையுடைய எம்மிறையாகிய சிவபெருமான் வெளிப்பட்டு அறியப்படுவன். பிஞ்ஞகன்: பின்னல் சடையினன். அன்னை அஞ்ஞை என்பது போன்று பின்னை பிஞ்ஞை என்றாயிற்று. சிவபெருமானை அறிவதற்கு அவன் திருவடியுணர்வே துணையாகும். அவ்வுணர்வினைச் சார்ந்து அறியும் உரமுடையான் சிவனருட் பெருந்தன்மைவல்லானாவன். (அ. சி.) பேர்ந்து - அஞ்ஞானம் ஒழிந்து - அறவே துணை - ஞானமே துணை. (4) 1765. தானே யறியும் வினைகள் அழிந்தபின் நானே யறிகிலன் நந்தி யறியுங்கொல் ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின் தேனே யனையனந் தேவர் பிரானே. (ப. இ.) ஆருயிரின் இருள்சேர் இருவினையும் அருளால் அழிந்த பின் அவ்வுயிர் தன்னைத்தானே திருவருட்டுணையாலறியும். மலகன்ம மாயைகளை அவ் வுயிர் அறியாது. அவ்வாறிருப்ப நந்தியாகிய சிவபெருமான் அவற்றை அறிவது எங்ஙனம்? அவன் அறியான். அறியான்: ஈண்டு அனுபவியான். உள்ளம் உருகித் தொழுது உணரப்படும் உணர்வாகிய சிவனை உணர்ந்தபின், தேனே அனைய சிவபெருமானின் திருவடியின்பத்தை உயிர் துய்க்கும். (5) 1766. நானறிந் தன்றே யிருக்கின்ற வீசனை வானறிந் தாரறி யாது மயங்கினர் ஊனறிந் துள்ளே யுயிர்க்கின்ற ஒண்சுடர் தானறி யான்பின்னை யாரறி வாரே.
|