17. முத்திரை பேதம் 1855. நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியிற் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.1 (ப. இ.) நாலேழு என்பது நாலும் ஏழும் என்னும் உம்மைத் தொகை. எனவே பதினொன்று என்று ஆகும். அறிதற் கருவியாகிய செவி. மெய், கண், நாக்கு, மூக்கு என்னும் ஐந்தும், செய்தற் கருவியாகிய கருவாய், கால், கை, வாய், எருவாய் என்னும் ஐந்தும், மனம் ஒன்றும் ஆகிய பதினொரு மெய் - தத்துவங்களையும் அருளால் தம் வழிப்படுத்திய தெளிவினரே முத்திரையாகிய சிவப்பொறி பொறித்துக்கொள்வர். ஈண்டு முத்திரை யென்பது திருத்தொண்டத் தொகைத் திருப்பாட்டுப் பதினொன்றனையும் காதலுடன் இடைவிடாது ஓதுதல். ஏனைய பயனில்லாத ஆரவாரமுள்ள பேச்சுகளைப் பேசுவதற்கு வாயின்கண் இடம்பெறாமல் ஊமை போன்றிருத்தல். ஊமை - வாய்வாளாமை. அதன்கண் வாய்வாளாமையை மேற்கொண்டு மனத்தையும் பதிவித்து முழுமுதற் சிவனாம் நந்தி திருவடிக்கண் சென்றுய்ய, உலகியல் ஆரவாரப் பெருமைச் செயல்கள் நீங்குதல் வேண்டும். அங்ஙனம் நீங்கிக் கைக்கொள்ளும் இடையறாச் சிவனினைவே திருவடிப்பேறாகும். கோலாகலங் கேட்டு எனப் பாடங்கொள்ளின் திருவடிச் சிலம்பொலி கேட்டு எனக் கொள்க. கோலாகலம் - கூக்குரல். இனி அழகிய ஆய்ந்தணிந்த கலம் - வீரக்கழல். ஆகுபெயராக அதன் ஓசையைக் குறித்ததென்றலும் ஒன்று. (அ. சி.) நாலெழும் - மண்முதல் 11 தத்துவங்கள். ஆற - அடங்க. கோலாகலம் - பத்துவித நாதம். (1) 1856. துரியங்கண் மூன்றுஞ் சொருகிட னாகி அரிய வுரைத்தார மங்கே யடக்கி மருவிய சாம்பவி கேசரி யுண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. (ப. இ.) உயிர் உடலுடன்கூடித் தன்னை மறக்கும் நிலை பேருறக்கம் என்ப. இதனை உடற்பேருறக்கம் எனவும், இதுபோல் அருளுடன் கூடியநிலை அருட்பேருறக்கம் எனவும், சிவத்துடன் கூடியநிலை சிவப்பேருறக்கம் எனவும் கூறுப. இம்மூன்றும் முறையே சீவதுரியம், பர துரியம், சிவதுரியம் எனக் கூறதலுமாம். இம்மூன்றும் திருவடியுணர்வால் அடங்குமிடனாகி, அரியவுரையாகிய நன்மொழி புகலுதற்குரிய கருவியாம் தாரம் என்னும் நாக்கினையும் உடனடக்குதல் வேண்டும். இது பொருந்திய சாம்பவி கேசரி முத்திரையின் உண்மைப் பெருக்கமாகும். சிவஞானம் விளங்குவதாகிய முத்திரையும் அதுவே யாகும். (அ. சி.) துரியங்கள் மூன்று - சிவதுரியம், சீவதுரியம், பரதுரியம். சொருகிடம் - அடங்குமிடம். தாரம் - நாக்கு. பிறழ் - விளங்குகின்ற. (2)
1. பிறர்மறை. நாலடியார், 158.
|