860
 

(அ. சி.) பத்தொரு பத்து - மண் முதல் தத்துவம் இருபது. ஓர் மூன்றும் - ஒன்றும் + மூன்றும் - நான்கு; அந்தக்கரணங்கள் 4. துரியம் - புருடன். காலம் - ஆன்மா. வியோமம் - ஈசன். மேலைத்துரியம் சிவம்.

(9)

2137. விளங்கிடு முந்நூற்று முப்பதோ டொருபான்
தளங்கொ ளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு மைம்மலம் வாயு வெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே.1

(ப. இ.) விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்த அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம் முப்பத்தாறையும் அறுநூறுடன் பெருக்க இருபத்தோராயிரத்து அறுநூறு ஆகும். இவையே ஒருநாளைக்கு நாம் விடும் உயிர்ப்பாகும். உயிர்ப்பு - சுவாசம். இவற்றுள் நம்மகத்துத் தங்குவது ஏழாயிரத்து இருநூறு ஆகும். இக் கணக்கின்படி ஒருநாளைக்குச் செலவாகு முயிர்ப்பு 21600. அதற்கு வரவாகும் உயிர்ப்பு 7200. ஆயின் பாக்கி 14400. நம்முடைய வாழ்நாளாகிய இருப்பு உயிர்ப்பிலிருந்து நாள்தோறும் செலவாகின்றது. அதனால் வாழ்நாள் மிகவிரைவில் முடிவெய்துகின்றது. அங்ஙனம் நேராதிருக்கும்படி உயிர்ப்புப்பயிற்சி நாடொறும் செய்தல்வேண்டும். உயிர்ப்புப்பயிற்சி - யோகாப்பியாசம். பொன்னைப் பொருளைத் தேடுவது போல் உயிர்ப்பையும் - மூச்சையும் திறந்தவெளியில் நன்றாக நிமிர்ந்திருந்து சிவனினைவுடன் உள்ளிழுத்துத் தொகுத்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். இதன் விரிவை இந் நூல் பிராணாயாமம் என்னும் தலைப்பின் கீழ்க் காண்க. அத்தகைய பயிற்சியினர்க்கு ஐவகைப் பாசங்களும் விலகும். அப்பொழுது ஒப்பரிய மெய்ப்பொருளாம் சிவபெருமான் விளங்கித் தோன்றுவன்.

(அ. சி.) முந்நூறு - 300. முப்பதோடு ஒரு பான் - 30 X 10 = 300 ஆக மொத்தம் = 600. இரட்டியதாறு - 36. 600 X 36 = 21600. நடந்தால் - 21600 சுவாசம் நடந்தால்.

(10)

2138. நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிர
மேலுமோ ரைந்நூறு வேறா யடங்கிடும்
பாலவை தொண்ணூறோ டாறுட் படுமவை
கோலிய ஐயைந்து ளாகுங் குறிக்கிலே.

(ப. இ.) நான்கு கோடியே நாற்பத்தெண்ணாயிரத்து ஐஞ்ஞூறு மெய்கள் சிறப்பாகக் காணப்படும். அவை அனைத்தும் தொண்ணூற்றாறென்று கூறப்படும் மெய்களினுள் அடங்கும். அவற்றையும் அடக்கிக் கூறினால் இருபத்தைந்து மெய்களுள் அடங்கும். மெய்கள் - தத்துவங்கள்.

(அ. சி.) தத்துவங்கள் 40048500-ம் 96 தத்துவங்களிலும், அவை 25 தத்துவங்களிலும் அடங்கும்.

(11)


1. அழிவதூஉம். திருக்குறள், 461.