(ப. இ)அருளால் பெற்ற உயர்ந்த இன்பப் பண்புகளை யுடையவர் வானவர். பொருளால் முனைத்த மருளாம் பண்புகளையுடையவர் தானவர். வான் - உயர்வு. தான் - முனைப்பு வானவர்களைத் துன்புறுத்தும் தானவர்கள் முப்புரத்தாராவர். அவர்கள் வாழும் முப்புரங்களையும் (329) செற்றுச் சிரித் தெரித்தவன் சிவன். அவனே முழுமுதல். அவனைக் கானவனாகிய வேடர் கோனென வழிபடுவோமாக. எஞ்ஞான்றும் பிறப்பாகிய கருவரை யில்லாதான் சிவன் என்று வழிபடுவோமாக அங்ஙனம் வழிபடுவார் உடம்பகத்தும் உயிரகத்தும் திடம்பட வீற்றிருந்தருள்பவன் சிவன். அவனை வழிபடுவார் அவனுடன் ஒன்றுபட்டு இறவா இன்புற்று வாழும் நன்மையராவர். (அ. சி.) வலிசெய்து - துன்பம்செய்து. கானவன் - வேடன்; ஆனந்தமளிப்பவன். கருவரையான் - குறிஞ்சிக்கிழவன் அல்லது பிறப்பை வேர் அறுப்பவன். ஊன் அதனுள் - சரீரத்துள். (9) 2586. நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் 1றேனே. (ப. இ.) ஆருயிர்கள் உய்தற் பொருட்டுக் கருவித் துணையாக உலகக் காரியங்களை உள்ளதாகிய மாயையினின்று படைத்தருளியவன் சிவன். அவன் அவ் வுலகங்களைப் படைத்த ஞான்றே இத்துணைக் காலம் நிலைபெறுக என்றும், பின் நிலைமாறிக் காரணத்தின்கண் உறுக என்றும் திருவாணை ஈந்தருளினன். அவனே முழுமுதற் சிவன். அவனை என் உள்ளம் புறத்து நாடிக் கலக்கம் எய்துகின்றது. மலையுள்ளும் நாடினேன். வானகத்தும் நாடினேன். பிறவிடத்தும் நாடினேன். அவன் அவ்வவ் விடங்களை நம்முள்ளத்து உறையவரும் வழியாகவுள்ளான். ஒருவரை உறைவிடத்தன்றித் துறையாம் வழியிடத்து என்றும் காண்டல் செல்லாது. அதுபோல் ஆண்டவனையும் அன்பார் அகத்துத்தான் உண்மை வடிவிற் காணுதல் கூடும். அங்ஙனம் கண்டு அவன் திருவடியின்பில் முழுகினேன். சிவனைப் புறத்துக்காண்பது அவன்றன் சார்பு வடிவமாகும். அகமாகிய உணர்வில் காண்பதே அவன்றன் உண்மை வடிவமாகும். (அ. சி.) நிலைபெறு(க) கேடு என்று - இருக்க அழிக என. புறத்தும் - நரக புவனங்களிடத்தும். (1)
1. வானத்தான். 11. காரைக்காலம்மையார். " மலைகெடுத்தோர். திருவருட்பயன். 37.
|