2618. நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங் கனத்த மனத்தடைந் தாலுயர்ந் 1தாரே. (ப. இ.) பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுனையின்கண் திருவாணையாக விளங்கும் அறிவுப் பேரொளியானை நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக வுறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும். உரன்-திண்மை. அத்திண்மை சேர் மனத்துச் சிவபெருமானைப் பொருந்தச் செய்தவா, உயர்வற உயர்ந்த ஒருவராவர். தினை : பண்டு வழங்கியதோர் சிற்றளவை. (அ. சி.) சுனை புருவமத்தி. விளைமலர்ச் சோதி - உள்ளக் கமலத்தில் விளங்கும் சிவ ஒளி. தினைப்பிளந்தன்ன - உடைந்த தினையரிசி அளவு கனத்த மனம் - நற்குணங்கள் நிறைந்தமனம். (11) 2619. தலைப்படுங் காலத்துத் தத்துவன் தன்னை விலக்குறின் மேலை விதியென்றுங் கொள்க அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே. (ப. இ.) மெய்யுணர்வுக் குரவனாம் சிவபெருமானை அவனருளால் தலைப்படுமிடத்துத் திருநாவுக்கரசு நாயனார் திருக்கயிலை சென்ற காலத்தும், ஆறைவடதளியில் வஞ்சமிக்க அமணரால் மறைக்கப்பட்டிருந்த திருக்கோவிலைத் திறப்பிக்க முயன்ற காலத்தும் ஏற்பட்ட இடையூறுகளை விதியென்றே கொண்டு முறையே 'மாளும் இவ் வுடல் கொண்டு மீளேனெனவும்'. 'உண்ணாதிருந்தார் எண்ண முடிப்பாரெனவும்' சேக்கிழார் அடிகள் கூறுவபோன்று உறுதியுடன் கூறி வரும் இடையூறுகளை மேலை விதியெனக் கொண்டு நீக்குவர் மெய்யுணர்ந்தார். எல்லாமாய் அல்லதுமாய் நின்ற காரணகருத்தாவாம ஆதியுடன் கூடிய அழியா அறிவுச் சோதிச் சிவபெருமானை இடையறா நினைப்பபுக் கொள்வதுஞ் செய்வர் அவர். அவரே சிவபத்தியினைச் சிரத்தினுள்ளும் சிந்தையினுள்ளும் சேர்த்துத் தேடிக் கைக்கொள்ளும் சிவபத்தராவர். (12) 2620. நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி நிகழ்வொழிந் தாரெம் பிரானொடுங் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையி னுள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
1. தினைத்துணை. திருக்குறள், 104. " பனையென். தொல்காப்பியம், எழுத்து. 169.
|