1154
 

(ப. இ.) திருவருளாற்றலாகிய சத்தியும், சிவபெருமானும், திருவடியுணர்வும், சொல்லுமிடத்து உலகுயிர்களைச் செலுத்தும் ஒப்பில் பொருள்கள் ஆம். இவை யனைத்தும் முடிவெய்தாது. சிவத்தின் ஒப்புயர்வில்லாத பேரின்பமுமுடையதாகும். வைத்த திருவருளும் உண்மை நிலைக்கண் சிவகுருவாக வந்தருள்வன். அத் திருவருள் கொள்ளும் திருமேனி நீலோற்பல மலரை யொத்து விளங்கும்.

(அ. சி.) சத்தி சிவன் பரஞானம்-சத்தியோடு் கூடிய சிவத்தைப் பரஞானத்தால் அறியவேண்டும். அபரஞானத்தால் அறியமுடியாது. அனந்த சிவம்-ஆனந்தம் சிவம், சிவானந்தம், (ஆனந்தம் என்பது குறுகிவந்தது.) உயர் ஆனந்தம்-உண்மையறிவு ஆனந்தம். வைத்த . . . . . போலுமே - திருவருட் சத்தி பதிந்து, குரு உபதேசம் பெற்ற ஆன்மாக்கள். ["ஓண் சீர் நிறம் மணம் பன்னிய சோபை" மன்னிய நீலோற்பலம் போலும். உடல் - உடலோடு கூடிய ஆன்மாக்கள்.]

(3)

2785. உருவுற் பலநிறம் ஒண்மணஞ் சோபை
தரநிற்ப போலுயிர் தற்பரந் தன்னின்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொருபத்தன் சத்தியாதி தோன்றநின் றானே.

(ப. இ.) அழகிய உற்பல மலரில் நிறம், சிறந்த மணம், அழகு (சிறப்பு, தூய்மை) முதலியன வேறறப் பிரிப்பின்றிக் கலந்திருக்கின்றன. அதுபோல் ஆருயிர் சிவபெருமானிடத்தில் எப்பொழுதும் பிரிப்பின்றி வேறறக் கலந்திருக்கின்றது. சிவபெருமான்பாலுள்ள எண்பெருங்குணங்களும் அவ் வுயிரின்மாட்டும் பதிந்து விளங்கித் தோன்றும். பள்ளி மாணவன் எப்பொழுதும் ஆசானைச் சார்ந்திருக்கின்றான். அதனால் ஆசிரியனின் நற்பண்புகள் மாணவனிடம் பதிகின்றன அல்லவா? இஃது இதற்கு ஒப்பாகும், ஆருயிர்களின்மாட்டுச் சிவபெருமானின் எண்குணங்களும் பதியவே ஆருயிர், அருள், அருளோன் - ஆருயிர், பேரருள், பெருமான் என்ற மூன்று நிலையுமாகச் சிவபெருமான் மறைந்து நின்றருளியவன் இப்பொழுது வெளிப்பட்டு அவ் வுயிரின்மாட்டுத் திருவருள் ஆற்றல்கள் தோற்றநின்றருள்புரிவன். அதனால் அவ் வுயிர் சிவமாகவே நிற்கும் சத்தியாதி என்பது 'சத்தியா' எனநின்றது.

(அ. சி.) உயிரானது எப்பொழுதும் சிவத்தோடு பொருந்திநிற்க, நீலோற்பலத்துக்கு அஞ்சு குணங்கள் பிரிவற இருப்பதுபோல், உயிருக்கும் சிவத்தின் குணங்கள் சிவசத்தியால் உடல் உள்ளபோதே தோன்ற நிற்பன என்பது இம் மந்திரம்.

(4)

2786. நினையும் அளவின் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலு மாகும்
எனையுமெங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் 1தனனே.

(ப. இ.) சிவபெருமானைத் திருவருட்டுணையால் மறவாது நினையுமுறையில் உள்ளம் கள்ளமின்றி வெள்ளமாயுருகித் தாளை வணங்கிப்


1. பித்த. அப்பர், 5. 44-6.