1205
 

மனம் வையாது இரண்டினையும் ஒப்ப நோக்கினால். வாழ் + ஐ இடங்கொண்டு - என்றும் உள்ள சிவம். மனத்தின்கண் இடம் கொண்டு.

(56)

2882. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஒட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமு மின்றி யடுவது மாமே.

(ப. இ.) ஆருயிர் திருவருள் வலத்தாலும் நல்லாரிணக்க நலத்தாலும் சிவபெருமானின் திருவடியுணர்வை எய்துதல் வேண்டும். அந் நெறிச் செல்லாது நிலத்தை உழுதலானும், நிலத்தைப் பிளந்தும் காலிற் போதலானும், கலத்திற் சென்று கடல்கடந்து மிடலொடும் பெரும் பொருள் ஈட்டலானும் கொன்னே காலம் போக்குவர். நில ஒப்பினால் உடலைப் பெரிதெனச் செருக்கலும், காலினும் கலத்தினும் புகுதலான் உடைமையைப் பெரிதெனச் செருக்கலும் ஆகிய தம் முனைப்புடையாராயிருப்பர். முனைப்புடையராகவே ஐம்புல வேடருட்படுவர். அதனால் அறிவு திரிந்து வேடராவர். புணர்ந்த கொழுமீன் என்றதனால் இருவினைத் துடக்குட்பட்டுப் பிறப்பு இறப்புக்குட்படும் சிறப்பிலராவர். அருள் நாட்டத்தால் இவற்றை யகற்றுதல் வேண்டும். அகற்றாதொழியின் குறைவிலா நிறைவாய் வளரும் திருவடியின்பமாகிய அருத்தம் எய்தாது. அதுமட்டுமன்றி ஆருயிர்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பினுக்குட்படுத்தி அளவில் துன்பத்தினையும் எய்துவிக்கும்.

(அ. சி.) நிலத்தைப் பிளந்து - பூமியின்கண் சகலபோகத்தையும். நெடுங்கடலோட்டி - கடல் யாத்திரை செய்து வேண்டிய செல்வங்களை ஈட்டியும் புனத்துக் குறவன் - ஐம்புல அனுபவியாகிய சீவன். புணர்ந்த கொழுமீன் - அடைந்த தேக உலக பாசங்கள். அருத்தம் - நற்பயன். அடுவது - பிறந்து இறந்து உழல்வதுமாம்.

(57)

2883. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டா னகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்குங் குசவர்க்குங் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றிங் காய்ந்துகொள் வார்க்கே.

(ப. இ.) சிவபெருமான் திருவடியையன்றி எண்ணத்தின்கண் வேறொன்றும் மருவுவதற்கு இடங்கொடாதவன் தட்டானாவன். தட்டுதல் - மருவுதல். தளைதட்டுதல் - தளைபொருந்துதல் என்பதனான் உணர்க. பற்றற்று நிற்பார் தம் உள்ளத்துப் பிளவுபடாத ஒப்பில் தலைமைத் திருவடியின்பம் பெருகும். பிள்ளை: பிள் + ஐ - பிள்- பிளவுபடுதல். ஐ - தலைமைத் திருவடியின்பம் வெற்றி முழக்கம் செய்வதோர் சங்கொலியுண்டு. வேந்தனாகிய ஆருயிர்களை நாடிக் களிக்கும் குசவராகிய விடுத்தல் மூச்சும், காவிதியாகிய எடுத்தல் மூச்சும் என்னும் இரண்டன் பாலும் மனத்தைச் செலுத்தினால் அம் மனம் அவற்றிற்கு இரையாகும். விடுத்தல் - இரேசகம். எடுத்தல் - பூரகம். அப்பொழுது அகத்தவப் பயிற்சி ஆசான் வாயிலாக ஒப்பற்ற தடுத்தல் மூச்சாகிய கும்பகத்தை ஆய்ந்து கொண்டு அதன்வழி யொழுகுவார்க்கு அழியாப் பேரின்பம் உண்டாம்.