165
 

(ப. இ.) ஏழுலகமும் ஒன்றாய்ப் பொருந்துமாறு தழற்பிழம்பாய் நின்றருளியவன் எம் அண்ணலாகிய சிவபெருமான். அவன் இயற்கையிலேயே உலகமே உருவமாக நிற்பவன். வானத்துக் கூறப்படும் ஏழுலகங்களிலும் பொருந்தி நிற்கும் திருநீலகண்டத்தை யுடையவனும் சிவனே. அச் சிவபெருமான் அடியேன் அவன் திருவடிக்கண் வைத்த காதலால் என்னை ஆட்கொண்டருளினன். அதனால் அவனருளாலே அவன் திருவடியிணையினை யானறிந்தேன். ஆண்மை - திருவாணை; திருவருள். ஏழுலகம் என்பதற்கு எழுவகைத் தீவுகள் என்றலும் ஒன்று. அவை வருமாறு: நாவல், இறலி, கிரவுஞ்சம், குசை, இலவம், தெங்கு, புட்கரம் என்பன. 'முதலது நாவலந் தீவே யுடைய, திறலியின் றீவே கிரவுஞ்சத் தீவே, குசையின் றீவே யிலவந் தீவே, தெங்கந் தீவே புட்கரத் தீவென், றேத்திய பெருந் தீ வேழிற்கும் பெயரே. (பிங்கலம், 452.)

(3)

361. ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்கித் திருவுரு வாய்அண்டத்
தாணுவும்1 ஞாயிறுந் தண்மதி யுங்கடந்து
ஆண்முழு தண்டமு மாகிநின் றானே.

(ப. இ.) கலப்பால் மாயாகாரிய உடம்பாய், அவ்வுடம்பகத்து வினைக்கீடாக வுறையும் உயிராய், அவ்வுயிரின் உணர்வாய் நீக்கமற நின்று காத்தருளுபவன் சிவன். தீயாய் இருப்பவனும் அவனே. முன்னம் அறியாமைமிக்குத் தம்முள் சண்டையிட்ட அயனும் அரியும் தெளியும் வண்ணம் தீப்பிழம்பாய் அண்டமுற நிமிர்ந்து நின்றவனும் சிவனே. அண்டங்களைத் தாங்கும் கற்றூணும் அவனே. ஞாயிற்றையும் திங்களையும் பொருள் தன்மையால் கடந்து நிற்பவனும் சிவனே. உதவுதல் தன்மையால் அனைத்து அண்டங்களையும் ஆளும் அண்ணலாய் நின்றருள்பவனும் சிவனே. இத் திருப்பாட்டு முதல் 'ஊழிவலஞ் செய்' என்னும் திருப்பாட்டு முடியச் 'சர்வோபாதானம்' எனச் சில ஏடுகளிற் காணப்படுவதாகக் கூறுவாருமுளர். தாணு - தூண்.

(4)

362. நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்2
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி3 நாடவொண் ணாதே.

(ப. இ.) சிவபெருமான் அவன் பொருள்சேர் புகழைப் புண்ணிய மெய்யடியார் புகழும்போது நீண்டு கொண்டே செல்வதுபோல் பேரொளிப் பிழம்பாய்த் தோன்றிய ஞான்று நீண்டுகொண்டே சென்றனன். இதுவே அண்டமுற நீண்ட இயல்பு. இப் பிழம்பினைக் கண்டு அறியாமையாற் கலாய்த்த அயனும் அரியும் அஞ்சினர். அவ்விருவரும் அதனை ஆராய்ந்து சென்றனர். முடியையும் அடியையும் முறையே இருவரும் அளக்கச் சென்றனர். காணவொண்ணாது நாணி மீண்டனர்.


1. பெற்றூணைப். அப்பர்; 6 . 68 - 9.

2. ஈற்கு 8. திருக்கோவையார், 109.

3. கற்றதனா. திருக்குறள், 2.