390. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே.1 (ப. இ.) திருவருளுடன் தானாய் நின்றுநிறைந்த ஆண்டானும், திருவாணைவழி இயக்க இயங்கும் அரன் அரி அயன் என்னும் மூவரும் கலப்பால் சிவபெருமானே யாவர். திருவினைப் பெருவாழ்வெனக் கொண்டு விளங்குபவன் திருமால். மணம் கமழும் செந்தாமரை மேலுறைபவன் திசைமுகனாகிய அயன். இசைந்திருத்தல் - திருவருளால் பொருந்தியிருத்தல். (23) 391. ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (ப. இ.) ஒப்பில்லாத விழுமிய முழுமுதற் சிவபெருமானாகிய ஒருவனே உலகங்கள் ஏழினையும் படைத்தருளினன். அவனே காத்தல் துடைத்தல் முதலியவற்றையும் புரிந்தருளினன். அவனே கலப்பினால் உலகமாய் உயிராய்த் திகழ்கின்றனன். உயிரினங்களாகிய அரன் அரி அயன் என்னும் மூவரும் சிவபெருமான் திருவாணை பெற்றுத் தத்தம் தொழில்களை இயற்றுவோராதலின் ஏவுதற் கருத்தாவாகிய சிவபெருமானாலேயே அவைகளும் செய்யப்படுவன. படைத்தல் காத்தல் துடைத்தல்களாகிய முத்தொழிலையும் முழுமுதற் சிவன் திருவுள்ளமாகிய நினைப்பளவானே செய்தருள்வன். அம்மட்டோ உயிரின் வேண்டுகோளை ஏற்று அவ்வுயிர்களைக் கொண்டும் புரிவித்தருள்வன். இஃதன்றோ விழுமிய கடவுட்டன்மை என்ப! (24) 392. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் அந்தார் பிறவி அறுத்துநின் றானே. (ப. இ.) எம் இறையாகிய சிவபெருமான் திருவடித் தோற்றத்தால் செந்தாமரை வண்ணமும், திருவடியுணர்வால் தீவண்ணமும் பொருந்தியுள்ளவன். வலிமை மிக்க முகில்வண்ணனாகிய மாயன் வினைக்கீடாகச் செய்யும் மயக்க ஆசையால் மணங்கமழும் பூங்கொத்து நிறைந்த மாலை சூடிய கூந்தலையுடைய பெண்களும் ஆடவரும் கூடிய கூட்டத்து இருள் நீங்கா ஆருயிர்கட்குப் பிறவி வந்து எய்தும். அப் பிறவியினை நற்றவத்தால் அறுத்து அருள்புரிவன் சிவபெருமான். பிறப்பறுத்தலும் சிறப்புறுத்தலும் சிவபெருமான் ஒருவனுக்கே உரிய ஒப்பில் திருவருட் செயலாகும். அந்தார்: அந்தம் + ஆர், என்பது அந்தார் என நின்றது. அந்தம் - இருள். ஆர் - நிறைந்த. (25)
1. எண்ணில். சிவஞான போதம். 4. 1 - 4.
|