262
 

தடைசெய்யாவழி அவ் வுயிர்ப்பு மனத்தைப் புலன்களிற் செலுத்தித் துன்புறச்செய்யும். உயிர்ப்பினைத் தடுத்து உரங்கொண்ட நெஞ்சகத்தார் அவ் வுடம்பின்கண் பலவூழி வாழ்தலும் செய்வர். ஏழு சாளரங்களும் இரண்டு பெருவாயில்களுமுடைய இவ்வுடம்பு காமம் வெகுளி மயக்கங்களாகிய குப்பைமிகுந்த பாழியறையுமுடையது. அப் பாழியறையினை 'அன்புகொடு மெழுகி அருள்விளக்கேற்றித், துன்பவிருளைத் துரந்து முன்புற, மெய்யெனும் விதானம் விரித்து'ப் பள்ளியறை ஆக்குதல் வேண்டும். ஆக்கவே சிவபெருமான் எழுந்தருளி விளங்கி எங்குமிலாததோர் இன்பநம்பாலதாக ஆக்கியருள்வன். போழ்கின்ற வாயு - மனத்தைப் புலன்கடோறும் அலையச்செய்யும் உயிர்மூச்சு. புறம்படா - புறத்திற் செல்லாதபடி. பாய்ச்சுறில் - நடுநாடியிற் செலுத்தினால். பாழி - தூய நிலைக்களமாகிய உடல். பள்ளியறை - சிவனெழுந்தருளும் சிற்றம்பலம்; (ஆயிர இதழ்த் தாமரை).

(அ. சி.) மனத்தைப் புலன்களிற் செலுத்துகின்ற வாயு. சாலேகம் ஏழு - ஏழு வாயில்கள் (செவி2, கண்2, மூக்கு2, வாய்1 ஆக7). பெருவாய் இரண்டு - எருவாய் கருவாய் ஆகிய இரண்டு. பள்ளியறை - உயிரும் சிவமும் ஒன்றி நிற்கும் இடமாகிய உள்ளம்.

(7)

575. நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை 1பொதியலு மாமே.

(ப. இ.) ஆங்காரத்தாற் செலுத்தப்பட்டு உடம்பகத்து நிறைந்திருக்கும் காற்றுக்கள் பத்து. அவை வருமாறு: 1. உயிர்க்காற்று, 2. மலக்காற்று, 3. தொழிற்காற்று, 4. ஒலிக்காற்று, 5. நிரவுகாற்று, 6. தும்மற்காற்று, 7. விழிக்காற்று, 8. கொட்டாவிக்காற்று, 9. இமைக்காற்று, 10. வீங்கற்காற்று. இவற்றுண்மையை வருமாறு நினைவுகூர்க:

"உயிர்மலம் தொழிலொலி நிரவுதும் மல்விழி
செயிர்கொட்ட டாவியிமை வீங்கற்கால் ஈரைந்து."

இவ் வீரைந்தில் உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் ஐயுயிர்ப்பு என அறையப்படும். உயிர்ப்புப்பயிற்சியின்றி இவை வீணாக வெளியிற் கழிந்தால் உய்யும் உணர்வில்லாத பேதாய் விழத்திருந்து என்செய்குவை. உயிர்ப்புப் பயிற்சியான் இவை வரம்பினுட்பட்டுத் திருவருள்வழியினைச் செய்வார்க்குக் குரங்காகிய மனத்தினை அடக்கிக் கோட்டையாகிய உடம்பகத்துப் பொதியவைத்தலும் உண்டாம். பொதியவைக்கவே திருவருளின்பம் நீங்காதோங்கும். பொதியல் - அடக்கல்.

(அ. சி.) ஈரைந்து - தசவாயு ஐந்து - பிராணன், அபானன்; வியானன், உதானன், சமானன். குரங்கு - மனம். கோட்டை - தேகம்.

(8)


1. (பாடம்) கொட்டை.