வோராண்டுப் பயிற்சியால் எங்கும் செறிதலும் எவ் வுடற்கண் புகுதலும் எய்தும். உடற்கண் புகுதல் - கூடுவிட்டுக் கூடுபாய்தல். (அ. சி.) அறிந்த பராசத்தி - யோகத்தாற் கண்ட சிற்சத்தி குறிந்தவை - குறித்தவை. (43) பிராகாமியம் (நிறைவுண்மை) 663. ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னே யுடையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்க்கு மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.1 (ப. இ.) ஆனவிளக்கொளி - எப்பொருளையும் விளக்கும் முழுமுதற் சிவத்தின் இயற்கையொளி. கானவிளக்கொளி - புருவநடுவிலுள்ள உயிர்க்கு உயிராய் உதவும் சிவவொளி. மேலை விளக்கொளி - வானோர்க்கு உயர்ந்த உலகத்துறையும் சிவவொளி. இவ்வொளிகளைக் காணும் பயிற்சியுடையார்க்குத் திருவடிப்பேறு. எளிதாநின்று இன்பந்தரும். இவரே மூல விளக்கொளி முன்னேயுடையவர். (அ. சி.) மூல விளக்கொளி - சீவனுடைய இயற்கை ஒளி. கான விளக்கொளி - ஆஞ்ஞையிலுள்ள ஒளி. (44) ஈசத்துவம் (ஆட்சியனாதல்) 664. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே. (ப. இ.) நுண்மை ஐம்பூதங்களையும் இயைந்தியக்கும் தெய்வங்கள் முறையே அயன், அரி, அரன், ஆண்டான், அன்னை அத்தன் என்ப. இவர்கள் முறையே நாற்றமுதல் ஐந்திற்குமாம். அன்னை அத்தன் - சதாசிவம். இவ் வுண்மை உணர்ந்து அவ்வப் பூதங்களின் தன்மையை அவ்வவ் விடங்களில் அமைத்துக்கொண்டிருந்தால், பண்டைய...மாகுமே - தொன்மை ஆண்டான்முறையில் ஆட்சியனாம். (45) 665. ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ னாமே. (ப. இ.) திங்கள் மண்டிலச் சிறப்புணர்ந்தவன் நிலவொளியாய், நிலவின் குளிர்ச்சியாய், நிலவின் கலைவளர்ச்சியாய், நிலவாய் விளங்குவன்.
1. இல்லக. அப்பர், 4: 11 - 8.
|