12. கலை நிலை 692. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே. (ப. இ.) நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் தன் திருவடியை எளிதிற்கூட அமைத்தருளிய அன்பு நெறிப்படி அவனை அக்கண்ணால் நோக்கும் மெய்யடியார்களுக்கு நெற்றியமிழ்தமாகிய கங்கை பெருகும். அவ் வழியாக ஆட்கொள்ளுதலுமாம். (அ. சி.) காதல்வழி - அன்புநெறி. கங்கை வழிதரும் - அமுதம் பெருகும். (1) 693. காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங் காக்கலு மாகுங் கலைபதி னாறையுங் காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங் காக்கலு மாகுங் கருத்துற நில்லே. (ப. இ.) அகக்கலன் நான்கையும், அமிழ்தகலை பதினாறையும், உயிர்ப்பினையும் திருவருள் துணையால் அடக்கவல்லார் திருவடியுணர்வில் கருத்தூன்றி நிற்பர். (அ. சி.) கலை பதினாறு - அமுதகலை 16. (2) 694. நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் மலைவற வாகும் வழியிது வாமே. (ப. இ.) நடுநாடிவழியாகச் செல்லும் உயிர்ப்பு ஒடுங்கிநின்றது. அது தூண்போன்று அசையாமலும் ஒளிபோன்று விளக்கமாயும் அமைய அமுத கலையிடத்து அம்மையும் அப்பனும் (சத்திசிவம்) இயைந்தியக்கும் எழிலை உணர்ந்தால், மருளானது தெருளாக மாறும். இதுவே தாள் தலைக்கூடும் வழியாகும். (அ. சி.) கலை...கலப்பை - அமுத கலையினிடத்துச் சிவம் சத்தி நின்ற கலப்பை. மலைவு - மயக்கம். (3) 695. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே. (ப. இ.) எங்கும் செறிந்துறையும் உயிர்த்தலைவனாம் சிவபெருமானை, புருவநடுவில் ஊறும் அமிழ்தம் பொங்கிவழியும் வழி, வாய்ப்பாகக்
|