924. ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே. (ப. இ.) ஓம் என முதற்கண் ஓசையை எழுப்புதல் வேண்டும் பின்பு நமசிவய என்னும் தமிழ் மந்திரத்தை நவிலுதல்வேண்டும். இதன்கண் நடுவெழு திருவிளக்குச் சிகரம். சிவயநம என்று ஓதுவதே திருவடி சேரவழியாகும். இவ்வுண்மை அறிவார்கள் திருச்சிற்றம்பலம் கண்டு என்றும் இன்புற்றிருப்பார்கள். மாமன்று - திருச்சிற்றம்பலம். (31) 925. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத் தோரெழுத் துள்நிற்கப் பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.1 (ப. இ.) 904இல் ஓதியபடி திருவம்பலச் சக்கரத்தில் அமைக்கப்படும் எழுத்துத் திருவைந்தெழுத்தாகும். இவ்வைந்தெழுத்தும் ஐந்து சொற்களின் முதலெழுத்தாகும். அவை அச் சொற்களின் மாட்டு விளக்கமுறும். இவ்வைந்தெழுத்தின் பொருளாக விரிவனவேயாம் ஐம்பத்தொரு எழுத்தும். இவ் வனைத்தினையும் உண்ணின்றுய்க்கும் முழுமுதல் சிவபெருமான் ஒருவனேயாம். பாகொன்றி - பகுத்தல் பொருந்தி. இத் திருப்பாட்டு அகவழி பாட்டைக் குறிப்பதாகும். 904-ஆம் திருப்பாட்டுப் புறவழிபாட்டைக் குறிப்பதாகும். (32) 926. பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமாய நமசிம பார்க்கில் மவயநசி பரமாய சியநம வாம்பரத் தோதிற் பரமாய வாசி மயநமாய் நின்றே. (ப. இ.) எவ்வகை மந்திரங்களுக்கும் முதன்மை வாய்ந்ததாய்த் தாயாய்த் திகழும் திருவைந்தெழுத்துள் நடுவாய் விளங்குவது 'ய' கரமாகும். இவ்வைந்தெழுத்தை: யநவசிம, மவயநசி, சியநமவ, வசிமயந - என நான்கு வகையாகக் கணிக்கப்படும். இங்ஙனம் எழுத்துக்களை நிலைமாறிக் கணித்தல் பொருளுண்மை நன்கு புலனாய்ப் பதிதற்கேயாம். (அ. சி.) அஞ்செழுத்துள் நடு - யகரம். இவ் வெழுத்தை முதலாக வைத்து மாறி உச்சரிக்கும் முறை இப் பாட்டில் கூறப்படுகிறது. (33) 927. நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.2
1. அஞ்செழுத்தே. உண்மை விளக்கம், 45. 2. பொன்பார். " 6.
|