383
 

(ப. இ.) என்றும் நின்று நிலவும் திருவைந்தெழுத்தாலேயே ஐம்பூதங்களும் நிகழ்வன. ஐம்பூதங்களுக்குரிய ஐந்து நிறங்களும் அவ்வைந்தெழுத்தாலேயே விளங்குவன. இவ்வைந்தெழுத்துக்களும் முதன்மை பெற நின்ற இடத்து அவ்வெழுத்துக்களின் உள்ளீடாய் நின்று செலுத்துபவன் சிவபெருமான்.

(அ. சி.) நின்ற....தானே - அவ்வாறு நின்ற ஐந்தெழுத்துக்களே 5 பூதங்களும் 5 வண்ணங்களும் ஆகப் பொருந்தி நின்றான்.

(34)

928. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

(ப. இ.) அழிவில்லாத திருவம்பலச் சக்கரத்தினான் எல்லா வுலகமும் நிலைபெறுகின்றன. இத் திருவம்பலச் சக்கரத்து நிலைபேறாகவுள்ள சிவபெருமானை அச் சக்கரவழிபாட்டினால் நந்தியெம் பெருமான் ஆன்கன்றின் வாயிலாகப் பால்பெறுவது போல் பெற்றுக்கொண்டனன். இந்நிலை குன்றிடை நிற்பார் நிலைத்தகொள்கைபோல் திருவம்பலச் சக்கரத்தின் பெறுபேறு நிலைத்தபேறாகும். மாயநன்னாடன் - மாயா காரியமாகிய நல்ல நாட்டின் தலைவனும் நடத்துவோனும் ஆகின்றவன்.

(அ. சி.) நின்றது...னாமே - இத் திருவம்பலச் சக்கரத்தைப் பூசித்து நந்திதேவர் கயிலையில் காவற்றலைமை எய்தினார் என்பது.

(35)

929. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

(ப. இ.) திருவம்பலச் சக்கரத்தால் பெறப்படும் நன்மைகள் பல. அவற்றுள் சிறந்தன படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிற் பெயருமாகும். மேலும் கூத்தப் பெருமான் தன் திருவுருவினைக் கீழிருந்து மேல்நோக்கின் 'நமசிவய' எனவும், மேலிருந்து கீழ்நோக்கின் 'சிவயநம' எனவும் வழங்கும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தின் சீருமாகும். குறி - பெயர். இவ்வுண்மை உண்மை விளக்கத்திற் காணப்படும் 'சேர்க்கும்' (34) 'தோற்றம்' (36) என்னும் (363) திருவெண்பாக்களான் உணர்க.

(அ. சி.) குறியைந்து - மூலாதாரத்தைத் தவிர்த்து ஆதாரச் சக்கரங்கள் ஐந்து. எழுத்தைந்து - அச் சக்கரங்களின் நடுவில் விளங்கும் எழுத்துக்கள் ஐந்து.

(36)

930. வெளியி லிரேகை யிரேகையி லத்தலை
சுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.