972. நம்முதல் அவ்வொடு நாவின ராகியே அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு உம்முத லாகவே உணர்பவர் உச்சிமேல் உம்முத லாயவன் உற்றுநின் றானே. (ப. இ.) நகர முதலாக உயிர் அடையாளமாகிய அகாரம் (953) ஈறாக இடையறாது ஓதும் நாவினராகி, பின் கூறப்பட்ட எட்டறைகளுள் உகரத்தை முதலாகக்கொண்டு உணர்பவரின் தலைமேல் அவ் வுகரமாகிய (1721) திருவருளாற்றக்குரிய முதல்வனாகிய சிவன் திருவடி சூட்டுவன். இத் திருப்பாட்டில் நமசிவய என எழுதவும் ஓதவும் கூறப்பட்டுள்ளன. அகரம் உயிரடையாளம் என்றால் எழுதும்போது யகரம் எழுதுதல் வேண்டும். (அ. சி.) நம்முதல் - நகர முதலாகக்கொண்டு. எட்டிடை - எட்டு அறைகளில். உம் முதலாயவன் - சத்தி முதல்வனாகிய சிவன். ("பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி" என்பது காண்க.) (79) 973. நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந் துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத் தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. (ப. இ.) மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாக நிற்கும் அரசமரத்தின் பலகையில் திருவைந்தெழுத்தை மகர முதலாக வரையமைத்து எழுதுதல் வேண்டும். அம் மந்திரத்திருவுருவினுக்கு பூவும் புனலும் புகையும் ஒளியும் பாவும் பிறவும் கொண்டு வழிபாடு செய்க. ஓலையின்கண்ணும் அத்திருவைந்தெழுத்தினை வரைந்து, அதன்மேல் மெழுகுபூசி அதைச் சிறிது வெப்பமுறக் காட்டி அப் பலகையின் மேல் வைத்தல் நிறுத்துதல் என்ப. நிறுத்துதலைத் தம்பனம் என்ப. 926-இல் மாறி எழுதும் முறை காண்க. (அ. சி.) அரசம்பலகை - அரசமரத்துப் பலகையில் யந்திரத்தைச் செதுக்கி. மவ்விட்டு - மகரமுதலாக அஞ்செழுத்தை மாறி. சாதகம் - உருவேற்றுதல். (80) 974. கரண விரளிப் பலகை யமன்றிசை மரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டு வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை முரணிற் புதைத்திட மோகன மாகுமே. (ப. இ.) பயன் கைகூடச் செய்தற்குத் துணையாங் கருவியினைக் கரணம் என்ப. கரணம் அமைத்து என்பது இரளியாகிய கொன்றை மரப்பலகை செய்தலாகும். யமன் திசையாகிய தென்திசை முகமாக அப் பலகையினை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழிப்பதன் பொருட்டு எட்டறையில் மகர முதலாக மாறி மாறி வரைந்து, வரணமாகிய மறைப்பில்லாத ஐங்காயம் பூசி அடுப்பினகத்துத் தலைகீழாகப் புதைத்திடல் மோகனமாகிய மயக்கமுறை என்ப.
|