434
 

1073 .நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

(ப. இ.) நிலைபெற்று நின்றருளும் வயிரவி நீலநிறம் அமைந்தவளாதலின் நீலி. அன்பறிவாற்றல்களாகிய மூன்றும் இறைவியின் திருவடியில் முறையே ஒடுங்கப்பெற்ற மெய்யடியார்கள்தம் உள்ளத்து விரைந்து சென்றருளும்முதல்வி. பேரொடுக்கத்தின் பின்னும் நிலைத்திருப்பவளாதலின் அப் பேரிருட்காலத்தும் விளங்கும் நிசாசரி. சிவபெருமானை விட்டு நீங்காத நன்மையருளும் திருவருளம்மை உலகோர் அவ்வம்மையின் திருவடியைப் புகழ்ந்து நாடித் தொழுவாராக ஒன்றுமிரண்டு - மூன்று; அன்பறிவாற்றல்கள். நிசாசரி - இருளிலும் நடப்பவள்.

(அ. சி.) நிசாசரி: நிசி + சரி - இரவில் சஞ்சரிப்பவள். பேர் ஊழிக் காலத்து, சந்திரர் சூரியர் கெட்டு இருக்கும் நிலைபெற்ற இருளில் உள்ளவள் ஆனதால் நிசாசரி.

(23)

1074 .சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.1

(ப. இ.) உலகியல் ஒழுக்கம் செம்மையாகப் போதிக்கும் தமிழ் மறையகத்து விளங்கும் தனிப்பெரு முதல்வி திருவருளம்மை. இயங்குதிணை நிலைத்திணை என்னும் இருவகை இடங்களிலும் இயைந்தியக்குபவளும் அவளே. ஐம்பூதங்களுடன் விரவி அவற்றைச் செலுத்துபவள். நான்கு புலத்தினும் நிறைந்திருப்பவள். மூன்று திருக்கண்களையுடையவள். கருதப்படும் இருளையும் வெளியையும் இயக்குபவள். தோன்றியுள்ள பல் வேறு உயிர்களுக்கும் வேண்டுவ அருளும் பேரொளிப்பிழம்பி, முடி விலாற்றலுடன் விளங்கும் முதல்வி, எல்லாம் அவளேயாவள்.

(அ. சி.) உலகின்கண் உள்ள சரம் அசரம் முதலிய பொருள்களும் வேதங்களும் ஆகமங்களும் உலகங்களும் உயிர்களும் எல்லாம் சத்தி சொரூபம் என்று இப் பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.

(24)

1075 .ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி யுணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத வுலவாத கோலமொன் றாகுமே.2

(ப. இ.) நடப்பாற்றலைச் செய்யும் வயிரவி. எல்லாம் ஈன்றெடுத்தும் என்றும் கன்னியாயிருப்பவள். சிவபெருமானுக்கு உடலுயிராயவள் அறியாமை நிறைந்த உலகினர் அவளை அன்புடன் வழிபட்டால் பிறவி அகலும். ஓதுதற்கரிய மெய்யுணர்வே திருமேனியாகவுடையவள்.


1. விளம்பிய. சிவஞானபோதம், 5.

2. பாதாளம். 8. திருவெம்பாவை. 10.