1110 .இரவும் பகலும் இலாத இடத்தே குரவஞ்செய் கின்ற குழலியை நாடி அரவஞ்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவஞ்செய் யாததோர் பாலனு மாமே.1 (ப. இ.) நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்விடத்து, அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க் குழவியை ஆராயின் அவ்வுயிர் ஐந்தெழுத்துணர்வேயாக நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது. அருளுடனே தங்கிநிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒருபடித்தாக இருக்கும். அதனால் பருவம் செய்யாத பாலன் என்றார். (அ. சி.) இரவு....தே - நினைப்பு மறப்பு இல்லாமல். குரவம் - விளையாட்டு. அரவம் செய்யாமல் - உதடு அசையாமல். பருவம்..தோர் - பாலன், குமரன் முதலிய பருவங்கள் இல்லாததோர். (10) 1111 .பாலனு மாகும் பராசத்தி தன்னொடு மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே. (ப. இ.) நீங்கா இளைமைபெற்ற ஆருயிர் திருவருளம்மையுடன் நாத விந்துக்கள் என்று பேசப்பெறும் ஓசையும் ஒளியுமாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்துசெல்ல முழுமுதற் சிவபெருமான் திருவடியைத் தலைக்கூடும். அவ்வாறு நிறைந்த திருவருளைச் செய்யும் அம்மை முழுமுதல்வி. தற்பரத்தாள் - முழுமுதல்வி. (11) 1112 .நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே மன்ற னவற்றுள் மருவிடுந் தானே.2 (ப. இ.) முழுமுதற் சிவனை விளக்கமுறச் செய்யும் தொழிலாற்றல் வெளிப்பட, கூத்தப்பெருமானாகிய சிவன் அவ்வாற்றலுடன் கலந்தருள்வன். நிலைபெற்ற திருவருளாற்றல் அச் சிவத்துடன் அறிவாற்றலாக விழைவாற்றலாக அமைந்து நிற்கும். அறிவாற்றல் - ஞானசத்தி. விழைவாற்றல் - இச்சாசத்தி. (அ. சி.) நன்று....சத்தி - ஈசனை நன்கு புலப்படுத்தும் கிரியா சத்தி. மன்றன் - கூத்தப்பெருமான். (12) 1113 .மருவொத்த மங்கையுந் தானும் உடனே உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
1. மன்றுளே. 12. திருநீலகண்டக் குயவனார், 42. 2. ஒன்றதா. சிவஞான சித்தியார், 1. 3 - 4.
|