(ப. இ.) இரைக்குடரில் தங்கும் சோற்றுவண்ணத்தள். கொப்பூழின் கண் செய்யப்படும் ஓமத்தினிடத்தும் பொருந்தியிருந்தனள். அவள் ஒப்பில்லாத திருவருளம்மையாவள். அவள் திருப்பெயர் 'நமசிவ' என்னும் நான்மறையாகும். அம் மறையினை மறவாநினைவுடன் வழுத்துவார்க்கு அம்மை மாறா உறுதித் துணையாவள். விட்டுநீங்காது விளங்கி நிற்பள். (அ. சி.) ஓமம் - அக்கினி காரியம்; நெய்யால் செய்யும் வேள்வி. (59) 1190. நிலாமய மாகிய நீள்படி கத்தின் சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின் சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே. (ப. இ.) திருவருளம்மை நிலவும் பளிங்குக்கல்லுப் போன்ற வெண்ணிறத்தினள். வட்டமாகிய திரண்ட முத்துப் போன்றவள். நெளிந்த நீண்ட தலையையுடையவள். ஐங்கலை வண்ணமாயிருப்பவள். ஆருயிர் உலகுடல் அனைத்துடனும் கலந்துநின்றனள். ஐங்கலை நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல். (அ. சி.) சுலா - வட்டம். (60) 1191. கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங் கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.1 (ப. இ.) திருவருட்கன்னி, காதலனாகிய சிவபெருமானுடன் கலந்து நின்றாள். ஆருயிர்கள் நாடும் நாட்டத்துள் எல்லாம் கலந்து நின்றாளும் அவளே. அவளே கலை நூல்கள் மெய்யுணர்வு நூல்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தனள். காலமும் ஊழியும் நாள்களுமாகிக் கலந்துநின்றவளும் அவளே. (அ. சி.) காலம் - கால தத்துவம். (61) 1192. காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங் கூலவி ஒன்றாகுங் கூட லிழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாமே. (ப. இ.) காலமெய்யாக நிற்கும் அம்மை ஊணாகவும் உண்பிப்பதாகவும் எங்கும் கலந்துநின்றனள். அவளே உற்றுழி உதவும் ஒருபெரும் திருவினள். ஆருயிர்கள் உலகுடல்களுடன் கூடும் தன்மையை அமைத்தவளும் அவளே. அவளே பேரன்பினள்; பெருமைசேர் குலத்தினள்; மந்திர உருவினள்; சண்டிகைப் பெயரினள். எண்டிசையும் ஓம்பும்
1. காலமு. அப்பர், 4. 14 - 3.
|