1212. என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்றது வாகுவர் தார்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே. (ப. இ.) என்றும் வளர்ந்தோங்கும் திருவருள் அழகினை எய்தினார் அப்பொழுதே அவ்வழகின் வண்ணமாகுவர். நடப்பாற்றலாகிய தார் குழலாளொடும் அவ்வாற்றலின் வெளிப்பாடாம் நிலைபெற்ற கங்கையாளொடும், மதியொடும், வணங்கும் மாதவரோடும், தொடர்ந்து காணப்படும் பேரொளிப்பிழம்பாக அம்மை நின்றனள். ஏர் - அழகு. (82) 1213. நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே. (ப. இ.) திருவருளம்மை நடப்பாற்றலுடன் நேர்படநின்றனள். அவ்வருள் காட்டக்காணும் உள்ளொளியாலே அஃது உணரப்படுவது. அவ்வடியின்கீழ்ச் சென்ற ஆருயிர்களின் நாட்டத்தில் வேண்டியவைகள் வந்து எளிதாகப் பொருந்தும். திருவடியுணர்வுகளும் தோன்றியிடும். (83) 1214. தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடு மாங்கவள் எய்திய பல்கலை மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாமவ ளாயுமே. (ப. இ.) திருவருளம்மை நன்னெறிச் செல்வார் அன்புகூர்ந்து விரும்பும் திருவுருவோடு தோன்றியருள்வள். அவள் பலவேறு கலைகளையும் உணர்த்துவித்துப் படைத்தருள்வள். மான்போலும் கண்ணை யுடைய அம்மையும், மாரனாகிய சிவபெருமானும் மெய்யடியார்முன் தோன்றியருள்வர். அங்ஙனம் தோன்றியருளுவதும் சிவபெருமானும் அம்மையும் பொருவால் ஒருவராயிருக்கும் உண்மையான் என்க. (அ. சி.) வேண்டுரு - விரும்பும் உருவம். (84) 1215. ஆயும் அறிவுங் கடந்தணு வாரணி மாயம தாகி மதோமதி யாயிடுஞ் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம தாநெறி யாகிநின் றாளே. (ப. இ.) திருவருளம்மை ஆராய்வும் அறிவும் கடந்த நுண்ணியல்பானவள். அவள் கச்சுப் பூட்டப்பெற்ற கொங்கையினை யுடையவள். அவளே சொல்லமுடியாத மருட்சியுடன் மதோன்மத்தியாவள் அவள் செந்நிறம் வாய்ந்த அம்மை. அவளே சிவப்பேரின்ப அழகி அவள் அன்புநெயியில் அகப்படும் திருவாய்நின்றனள். (அ. சி.) அணுவாரணி - அணுவுக்கணுவானவள். (85)
|