493
 

(ப. இ.) அக் கரிய ஒளியானது அண்டத்தை உள்ளிட்டு உலகெங்கும் நிறையும். பாரொளியும் நீரொளியுமாகிய இரண்டும் அடங்குவதற்குரிய சாரொளியாகத் தீயொளியும், அதனையும் அடக்கிக் கொண்டிருக்கும் சாலொளியாகிய காற்றொளியும், அதனையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மேலொளியாகிய வானொளியும் ஆகிய இவை எல்லாமும் மூலாதார முதலாகத் தோன்றிய ஐம்பூத மண்டலங்களினும் நிறைந்து நிற்பதால் அழகிய ஒளியாய் எங்கும் நிறைந்து நிற்கும் என்பது கருத்தென்க.

(அ. சி.) சாரொளி - தீயொளி. சாலொளி - வாயு ஒளி. ஏரொளி - மூலாதாரத்தினின்று ஐம்பூத மண்டலங்களிலும் நிறைந்த ஒளி.

(20)

1251. நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

(ப. இ.) பேரண்டங்களும் விரிந்த பல உலகங்களும் நிலைத்து நிற்கின்றன. ஊழி முடிவுவரை இவைகள் நிலைபெறக் காண்கின்றோம். இவைகளும் ஒருவகையான் மூலமலத்துடன் ஒக்கும். இவ் வண்டம் முதலன நிலைநிற்பதற்கு அடிப்படை வலுவாகவுள்ளது விந்து. மெய் - தத்துவம். விந்து - முப்பத்தைந்தா மெய்.

(அ. சி.) மூலமலம் - ஆணவ மலம். அண்டம் பலம் - அண்டத்துக்குப் பலம்.

(21)

1252. விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

(ப. இ.) விந்து நாதம் என்னும் இரண்டும் சமமாகக் கலந்தால் அவை அண்டத்துக்கு வித்து என்பர். விந்துவானது குறைந்து நாதமானது கூடித் தோன்றுமானால் அது மந்திரவித்து என்பர். கூடும் முறைமை விந்துவைவிட நாதம் எட்டு மடங்கு கூடுதலென்பர். விரை - வித்து. அது: பகுதிப் பொருள் விகுதி. வீசம் - பீசம், மந்திர வித்து.

(அ. சி.) ஒக்க - சமமாக.

(22)

1253. வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

(ப. இ.) நாதத்தில் நின்று தோன்றுவன மந்திர வித்துக்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று மேலோங்கும்படி விரைந்து செல்லும். வித்தும் நாதமும் மேலோங்கி எழுந்து ஒத்துடன் நின்றபின், அவை பரந்து விளங்கும்.

(23)