1297. நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடிச் சிரந்தரு தீவினை செய்வ தகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே. (ப. இ.) நானெறி நன்மையைத் தரும் திருவடியுணர்வும், ஏனைக் கல்வியுமெல்லாம் திருவருளாற்றலால் உறுதிப்பாட்டினைத் தரும். எஞ்சு வினையாகிய வல்வினை உம்மைவிட்டு நீங்கி ஒழியும். முதன்மையான ஏறுவினைதொடராது ஒழியும். அங்ஙனம் ஒழியும்படி செய்யப் பேரொளிப் பிழம்பாகிய சிவன் வந்து வாய்க்கும். எரிசேர் உனக்கிலா வித்துக்களிவை. (4) 1298. கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே. (ப. இ.) சக்கரத்தினை வெள்ளியினாலும் பொன்னாலும் செம்பினாலும் செய்தமைக்க. இச் சக்கரத்தினை முறையாக வழிபட்டுக் கணிக்க. கணித்தலும் அப்பொழுதே எஞ்சுவினைகள் வெல்லப்பட்டு நீங்கும். நாற்பத்தொன்பது நாளென்னும் ஒரு மண்டலம் வழிபட்டுவர, திருவருள் துணையால் வெற்றிகள் உண்டாகும். மேலும் அச் சக்கரத்தை நினைத்த அப்பொழுதே எல்லா நலமும் பெருகும். (அ. சி.) மண்டலம் - 49 நாள். 7 நாள் ஒரு வாரம் - (7 வாரம் ஒரு மண்டலம்.) (5) 1299. நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா நினைத்திடுஞ் சக்கர மாதியு மீறு நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.1 (ப. இ.) உண்மையன்பொடு நினைக்க. முற்கூறிய சிரீம் கிலீம் என்னும் முதலும் முடிவுமாக அமைத்து அச் சக்கரத்தினை முதலும் ஈறுமாக ஓதி நினைக்க. நினைத்துச் செந்நெல்லும் வெள்ளையறுகும் கலந்து அருச்சனை புரிக. அங்ஙனம் அருச்சிப்பார் நினைந்த அப்பொழுதே திருவருளம்மை செந்நின்று அருள்வள். செந்நின்று - நேர் நின்று. (அ. சி.) நெல்லொடு புல் - அருச்சனைக்கு. மஞ்சள் அரிசியும், அறுகம் புல்லும். (6) 1300. நேர்தரு மத்திரு நாயகி யானவள் யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை கார்தரு வண்ணங் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
1. செம்பொ. 12. சம்பந்தர், 1185. " நெல்லு மலரும், நெடுநல்வாடை, வரி - 43.
|