518
 

1328. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.1

(ப. இ.) திருவருள் வலத்தால் ஏழாக நிலைபெறும் உலகங்களனைத்தையும் ஒருமிக்கக் காணலாம். எல்லா உயிர்களின் உள்ளத்தினுங் கலந்து எங்கும் தானாகக் காணலாம். மாயாகாரிய உலகங்களின் உண்மைப் பண்பினை உள்ளவாறு உணரலாம். இருவினைப் பிணிப்பும் நம்மை விட்டு அகலும். மெய்வடிவாம் சிவனைச் சேர்ந்து நாம் உய்யலாம்.

(35)

1329. மெய்ப்பொரு ளௌமுதல் ஹௌவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சுரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

(ப. இ.) உண்மைப் பொருளாகச் சமைந்த அமுதேசுவரிச் சக்கரமானது 'ஒள' முதல் 'ஹௌ' ஈறாக வரையப்படுவது. திருவருளம்மையாகிய அமுதேசுவரி (நமசிவய) நடுவிலிருந்தாள் என்க. நடுவிருத்தலாவது நாடுவாரது நாட்டத்து அகமும் புறமும் ஒத்துக் காணப்படும் காட்சிப் பொருளாவது. 'உடையாளுந்தன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீயிருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப'தென்பது தமிழ் மறை முடிவாம் திருவாசகம்.

(அ. சி.) ஒள முதல் ஹௌ ஈறாக் கூறின் அமுதேசுவரிச் சக்கரம் என்ப.

(36)

1330. தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லை காணுமே.

(ப. இ.) உச்சிக்குமேல் ஆயிர இதழ்த் தாமரை என்று சொல்லப்படும் நிலைக்களத்துக்குத் தாளாகிய நாளம் போன்று காணப்படுவது நடு நாடியாகும். நடுநாடி எனினும் சுழுமுனை எனினும் ஒன்றே. நடுநாடியில் எழுந்தருள்பவள் அமுதேசுவரி. உயிர்ப்பினை எழுப்பி அம்மையுடன் கலந்து மேலேயுள்ள முழுமுதற்சிவத்தைப் பொருந்தும்படி செய்தால், அது நாளுக்குநாள் வியத்தகு புதுமைகள் பல காணச் செய்யும். கண்ட பின் உறவாகிய உடம்புக்கும் கேடில்லையாகும்.

(அ. சி.) தாள் அதினுள்ளே - தாமரைத் தாள்போன்ற சுழுமுனையிலே. காலது கொண்டு - பிராண வாயுவுடன். உற வீசிடில் - மேல் உறச்செய்திடில். நாளது நாள் - நாளுக்கு நாள். கேளது - தெரிந்துகொள்.

(37)


1. அரக்கொடு. சிவஞானபோதம், 2. 1 - 4.