519
 

1331. கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முத லற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.1

(ப. இ.) கெடாது நிலைத்திருக்கும் திருவருள் ஒளியைக் கண்டபின் நாடு முதலிய வேற்றுமை இல்லை. காலவரையறையைக் கடந்தபின் முன்பின் கீழ்மேல் என்ற இடப் பாகுபாடுகளும் இல்லை. திருவருள் கை வந்து எய்தச் சீல முதலிய நானெறிகளைக் கண்டபின் பிறவித் துன்பங்கள் உளவாகா. ஆதலின் திருவருளிடத்தில் உள்ளன்பைச் செலுத்துவாயாக.

(அ. சி.) நாடில்லை - தேச பேதம் இல்லை. மாடில்லை - பக்க பேதம் இல்லை. காடு இல்லை - துக்கம் இல்லை.

(38)

1332. உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிட மெல்லாங் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

(ப. இ.) ஆருயிர் திருவருள் வலத்தால் சிவமாந்தன்மை எய்தும். எய்தியபொழுது பார்க்கும் இடமெல்லாம் மாயாகாரியப் பொருள்கள் பகல் விளக்குப்போல் முனைத்துத் தோன்றாது அடங்கி நிற்றலால் அவை உலப்பில் பாழாகத் தோன்றும். உலகியற் பொருள்களைப்பற்றி முன் கற்றறிந்து கைக்கொண்ட பயிற்சிகளெல்லாம் விடுபட்டமையால் வெட்ட வெளியாகும். சிவத்தொடு கலந்தமையால் அப்பொடு கலந்த உப்பு அப்பேயாய்ப் போக்கு வரத்தின்றி ஒன்றேயாய்ப் புணர்ந்திருத்தல் போல் ஆருயிரும் கலப்பால் நிறைந்து ஒன்றேயாய் நிற்கும். அப்பொடு கல்முதலிய கரையாத பிற பொருள் சேர்ந்தால் கலவாது முறையே பளுவானது கீழும் எளிதானது மேலுமாக இருக்கும். அப்பு - தண்ணீர். உலப்பிலா - கேடிலா. உலப்பில் பாழ் - அடங்கி நிற்கும் நிலை.

(அ. சி.) உற்...பாழாக்கி - மாயா காரியம் எல்லாம் முழுவதும் ஒழித்து. கற்ற - அறிந்த. இடம் - உலகம். கடுவெளி - இன்மை. சலிப்பற - உறுதியாக அசையாமல்.

(39)

1333. நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.2

(ப. இ.) அண்டமாகிய உலகத்தின்கண், உள்ள முறைமைகள் பிண்டமாகிய உடம்பின் கண்ணும் காணப்படும். ஆதலின் ஏழ்கடலும் ஏழ்புவியும் உடலின் கண்ணும் காணலாம். திருவருள் துணையால்


1. யாதும் ஊரே. புறநானூறு, 192.

2. எண்ணிய. திருக்குறள், 666.

" சந்ததமும். தாயுமானவர், பரிபூரணானந்தம் - 5.