1375. கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப் படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே. (ப. இ.) மாற்றம் மனங்கழிய நின்ற மறையவளாகிய திருவருளம்மை கருதுவார் கருதும் திருவுரு ஆவள். அது வருமாறு : அழகிய பன்மணி குயின்ற பொன்னார் நன்முடியினள். மாணிக்கத் திருத்தோடு அணிந்தவள். முகத்தினாலும் பவழத்தினாலும் ஆய அணி அணிந்தவள். முத்தும் பவழமும் கரையில் கோத்த கச்சுப்பூண்டவள். படர்ந்த அல்குலினை உடையவள். அவ் வல்குலின்மேல் பட்டாடை உடுத்தவள். திருவடிக்கண் சிலம்பு பூண்டவள். அளவிறந்த பொறுமையள். என்றும் கன்னியாக இருப்பவள். கருதுவார் கருத்துக்கியைய எழுந்தருளி வந்து அருள் புரிபவள். சிறுவள் - கன்னி. (82) 1376. நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு வணிமாதி தானாகிப் பண்டைய வானின் பகட்டை யறுத்திட்டு ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே. (ப. இ.) என்றும் கன்னியாக நின்றருளும் பேரறிவுப் பேராற்றலளாகிய அம்மை அகத்தவஞ் சேர் உயிர்களுடன் எப்பொழுதும் விளங்கித் தோன்றுவள். அங்ஙனம் தோன்றுதலால் மேரு என்று சொல்லப்படும் புருவ நடுவில் அணிமா முதலாகச் சொல்லப்படுகின்ற எண் வகைச் சித்திகளும் தாமாகவே வந்து கைகூடும். ஆருயிர்களினது தொன்மைப் பிணிப்பாம் மலத்தை அறுத்திடத் துணைபுரியும் திருவடி யுணர்வாம் உள்ளொளி விளக்கம் அருளாலுணர்ந்தவர்களுக்கு உண்டாகும். பகடு - மலம், பிணிப்பு; கட்டு. (அ. சி.) மேரு - புருவமத்தி. ஆனின் பகடு - ஆன்மாவின் பாசம். தீபம் - ஒளியாகிய சத்தி. (83) 1377. உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே. (ப. இ.) அருளோன் என்று சொல்லப்படும் சதாசிவக் கடவுளின் கீழ் நோக்கிய திருமுகம் அம்மையின் திருமுகமாகும். அத் திருமுகமே சிறந்ததாகும். அவ் வாற்றல் சேர் அம்மையே சதாசிவ நாயகி ஆவள். இத் திருமுகத்தோடு சேர்ந்து சதாசிவக் கடவுளுக்குத் துணைவியாகிய அம்மைக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. ஐந்து திருமுகங்களுக்கும் பத்துத் திருக்கைகள் உண்டு. (அ. சி.) அதோமுக . . நாயகி - அதோ முக சத்தி; சதாசிவ நாயகியாகும். ஒன்று..ஆனதே - 1 - 2 - 3 - 4 - 10. (84)
|