(ப. இ.) காலவரையறையைக் கடந்த நாளிலியாகிய அம்மையின் திருவடியிணையைப் பொருந்தி நின்றவர்கட்கு அவ் வம்மை அழிவில்லாதவள் என்றும், முப்பத்தாறு சத்திகளையுடைய நாடற்கரிய முப்பத்தாறு கன்னிப் பெண்கள் தன்னைச் சூழவீற்றிருப்பவளென்றும், பிறப்பில்லாதவளென்றும், இறப்பில்லாதவளென்றும், நெஞ்சத்தாமரையாகிய பூவிதழினுள் இருந்து விளங்குகின்றவளென்றும் அருளால் உணரவரும். நாடிலி - நாடற்கரிய. பூவிலி - பிறப்பில்லாதவள். பூ - பிறப்பு. இவர் - விளங்குகின்ற. நணுகல் - பொருந்தல். (அ. சி.) பூவிலி - தோற்றம் இல்லாதவள். (91) 1385. நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியுங் கண்டது சோதி கருத்துள் இருந்திடக் கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு விண்டவௌ காரம் விளங்கின அன்றே. (ப. இ.) நெஞ்சத் தாமரையின்கண் எஞ்சாது விளங்கும் சிவ பெருமானும். மேலே கூறிய திருவருளம்மையைச் சுடருருவாய் அன்பர்கள் உள்ளத்து அமைத்திடலால் அவர்கட்கு ஓராண்டில் கைகூடியருள்வன். அக்காலத்து ஒளகாரம் முதலிய வித்தெழுத்துக்கள் விளங்கும் என்க. புந்தி - நெஞ்சம். வன்னி - சிவன். சோதி - திருவருட்சுடர். (அ. சி.) புந்தி....வன்னி - அனாகதத்தில் விளங்கும் உருத்திரன். கூடி வருகை - சித்தியாதல். விண்ட - மேலே சொன்ன. (92) 1386. விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச் சுணங்கிடை நின்றிவை சொல்லலு மாமே. (ப. இ.) வானத்திலுள்ள அண்டகோடிகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் நிலவுலகில் வாழும். உயிரினங்களைப்போன்று கண்டு கூறுதலும் உண்டாகும்; தூயமாயையின்கண் வாழும் கீழுள்ள திருமாலை இயக்கும் அருளாற்றல் வாய்ந்த மாலாகிய நாரணனைப் போன்று இடையறாது நெஞ்சத்தாமரையில் சிவனை நினையும் திருவருளுடையார்க்கு சுணங்கு - பூந்தூள்: நெஞ்சத்தாமரை (ஆகுபெயர்). (அ. சி.) வானிடை....எல்லாம் - வானிலுள்ள ஏனைய அண்டங்களின் உயிர்கள் எல்லாம். மண்டலம் - பூமி. (93) 1387. ஆமே அதோமுக மேலே அமுதமாய்த் தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே. (ப. இ.) கீழ்நோக்கியுள்ள திங்கள் மண்டிலத்தின்மேல் அமிழ்தமயமாய்த் தோன்றும் எழுத்து உகரமாகும். அதன்கண் திங்களும் செழித்து
|