574
 

பெருமான் அடியிணையைச் சேரும் பெரும்பேறதுவாகும். அன்பும் அச்சமுங் கொண்டு அவன் திருவடியினை நெஞ்சத்தமைத்துத் தொழுதால் சிவபெருமானும் அவ்வாருயிரினை முன்னின்று தாங்குபவனாவன். அன்பும் அச்சமுங்கொண்டு வழிபடும் முறையினைத் திருவள்ளுவநாயனார் "அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்." (691) என்னுந் திருப்பாட்டால் குறித்தருளினர். மேலும் "யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்" என்பதனால் அச்சமும், "யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தான்" என்பதனால் அன்புங்கொண்டு வழிபடுதல்வேண்டும் என்பதாம். அல்லதூஉம், சிறப்பின்பாற்கொள்ளும் அன்பும், பிறப்பின்பாற் கொள்ளும் அச்சமும் அகலாவுள்ளத்தராய் வழிபடுதலென்றலும் ஒன்று.

(அ. சி.) பயந்து பரிக்கில் - பயம் பத்தியுடன் சற்புத்திர மார்க்கத்தைக் கைபற்றினால்.

(5)

1473. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.1

(ப. இ.) பணிசெய்து கிடந்து அருள்வழிநின்று எம்பிரானாகிய சிவபெருமானைத் தொழுவேன். அப்பொழுது சிவப் பேரொளி தோன்றும். அந்த எழிற்பெருஞ்சுடரை என்றும் இடையறாது தொழுவன். மெய்யன்பர்களே, நீங்களும் மிக்க மலர்கொண்டு சிவபெருமான் திருவடியில் திருமுறைப் போற்றித் திருமாமறை ஓதி வழிபாடு செய்யுங்கள். நீங்கள் கைகூப்பி வலம்வந்து கீழ்வீழ்ந்தெழுந்து தலைவணங்கித் தொழுந்தோறும் தயிரில் வெளிப்படும் வெண்ணெய் போன்று தேவர்க்கும் பிரானாகிய சிவபெருமான் உங்கள் உள்ளத் தாமரையின்கண் வெளிப்பட்டருள்வன்.

(அ. சி.) சென்று - உதயமாகி.

(6)

1474. திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.

(ப. இ.) கிடைத்தற்கரிய மக்கள் யாக்கை பெற்ற உலகவரே! கேளுங்கள். மகன்மை நெறிக்கண் ஒழுகுவார்க்கு வீடுபேறு எளிதின் எய்தும். பிறவிக்கு வித்தாகிய ஆணவமலப்பாசம் இம் மகன்மை நெறியினரைக் கண்டு செயலற்றொடுங்கும். அதனால் நாள்தோறும் திருவைந்தெழுத்து ஓதித்தொழுது இன்புற்றிருங்கள். மகன்மைநெறி - சற்புத்திர மார்க்கம். கைகூம்ப - செயலற்றொடுங்க. கை - செயல்.

(அ. சி.) பாசங்கை கூம்ப - பாசம்கெட.

(7)


1. விறகிற். அப்பர், 5. 90 - 10.

" தன்னுணர. சிவஞானபோதம், 12. 3 - 1.