1795. நினைவதும் வாய்மை மொழிவது மல்லாற் கனைகழல் ஈசனைக் காண வரிதாங் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (ப. இ.) ஒலிக்கின்ற ஆண்மைக் கழலணிந்துள்ள சிவபெருமானைக் காணவல்லார் அருள் துணையால் சிவன் திருவடியை இடையறாது நினைவதும், மெய்ப்பொருள் தன்மையை உள்ளவாறுணர்ந்து மொழிவதும் (இறைபணி நிற்பதும்) செய்பவராவர். ஏனையார்க்குக் காண ஒண்ணாது. அச் சிவனை அருட்கண்ணால் காணவல்லார்க்கு வழிபாடு செய்யும் வகைமையுண்டாகும். அங்ஙனம் வழிபடுவார்க்குப் புனைமலரும் நீரும் தனைநிகரில் பொருள்களாகும். 'போற்றவல்லார்' என்றும் சொற்குறிப்பால் திருமுறைப் போற்றித்தொடர் புகன்று அருச்சனை பாட்டே யாகும் என்னும் முறைமை முற்றுவதே முழு வழிபாடாகும். நினைதல் - பாவித்தல் அப்பர் போற்றித் திருப்பதிகம் ஐந்து, அருள்வாதவூரர் போற்றித்திருவகவல் ஒன்று ஆக ஆறும் ஓதி நாளும் அருச்சிக்க. (4) 1796. மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட் டெட்டொடும் அஞ்சலி யோடுங் கலந்தர்ச்சித் தார்களே. (ப. இ.) அழகிய மாலை விளங்குகின்ற சிவவுலகினர் தம் உள்ளத்தின்கண்ணே சிவபெருமான் நிலைபெறுங் காரணத்தை உன்னில், அஞ்சமுதமும், பதினாறு முகமனும் கூடி வழிபடுவதாகும். ஐந்தமிழ் தென்பது பழவகை, தேங்காய், தேன், நெய், சருக்கரையாகும். கைகளை உச்சியின்மேல் ஏறக் குவித்தவராய்க் கசிந்த உள்ளத்துடன் திருமுறைத் திருப்பாட்டு மொழிந்து வழிபடுவதின் பயனாகும் சிவபெருமான் உள்ளத்தின்கண் வெளிப்பட்டு உறைவது என்க. (அ. சி.) அஞ்சமுது - பஞ்சாமிர்தம். உபசாரம் எட்டு எட்டு - 16 உபசாரங்கள். (5) 1797. புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு1 அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. (ப. இ.) செந்தமிழ்ச் சிவவழிபாட்டின் மிக்க புண்ணியம் ஒன்றும் இன்று. அவ் வழிபாடே அழியாப் புண்ணியம். அவ் வழிபாடியற்றும் மெய்யன்பினர்க்குப் பூவும் புனலும் முட்டில்லாமல் யாண்டும் கிட்டும். அண்ணலாகிய சிவபெருமான் அவ் விரண்டினாலும் செய்யும் வழி பாட்டினைக் கண்டு செவ்விய அருள்புரிவன். இவ் வுண்மையினைக் கருதியுணராதவர் பெரும்பாவிகளாவர். அது, 'சிவசிவ என்கிலர் தீவினையாளர்' (2667) என்னும் திருமொழியான் உணர்க. அவர்கள் சிவனை வழிபட்டு அவன் திருவடிசேர அறியாது செந்நெறி விலகிப் போகின்றனர். (6)
1. போதும். 11. பட்டினத்துப் பிள்ளையார் திருக்கழுமலம் 12.
|