2077. நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகமெத் தனையென் றொருவருந் தேறார் பவமத்தி லேவந்து பாய்கின்ற தல்லாற் சிவமத்தை யொன்றுந் தெளியகில் லாரே. (ப. இ.) அனைத்துயிர்க்கும் அனைத்துடலையும் அவை உறையும் உலகங்களையும் ஒழுங்குறப் படைத்து நியமித்தலாகிய யாப்புறுதலைச் செய்தவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய சிவபெருமான். அவன் அமைத்தருளிய உலகம் எத்துணை ஊழியாக நின்று நிலவுகின்றது என்று ஒருவராலும் அளவிட்டுக் கூறுதல் முடியாது. யாப்புறுத்தல்: இருவினைக்கு ஈடாக ஒழுகுவித்தல். ஆருயிர்கள் பிறந்து இறந்து தடுமாறும் தொழிலினவாகவே இருக்கின்றன. மக்கள் இவற்றை உணராது பிறந்து இறப்பதையே கருமமாகக் கொள்கின்றனர். அதுவல்லாமல் சிவபெருமானைப்பற்றியோ அவனைச் சென்றடையும் நன்னெறி நான்மையினைப் பற்றியோ ஏதும் தெளியாது கழிகின்றனர். நன்னெறி நான்மையென்பது 'சீலம்நோன்பு, செறிவு, அறிவு' என்பன. நன்னெறி: சைவச் செந்நெறி. (அ. சி.) நியமத்தன் - காரணன். உகம் - ஆண்டுகள். பவமத்திலே - பிறப்பிலே. பாய்கின்றது - இறப்பது. (14) 2078. இங்கித்தை 1வாழ்வு மெனைத்தோ ரகிதமுந் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத் துறையும் விகிர்தா எனநின்னை நஞ்சற் றவர்க்கன்றி நாடவொண் ணாதன்றே. (ப. இ.) நிலையில்லாத இவ் வுலக வாழ்க்கை புல்நுனிப் பனியினும் சின்மையதாகும். இதனை மலையினும் பெரிதாக எண்ணி மகிழ்வர் மருளினர். அது பெரும் பேதைமைச் செய்கையாகும். அதன்பொருட்டு எத்துணைச் சிறுதுன்பமும் இறக்கநேரினும் செய்யாதிருப்பதே அறமும் முறையும் அறிவுமாகும். சிவபெருமான் தூய பளிங்கனைய வெண்ணிற வண்ணத்தன். அவனைத் தத்துவங்கடந்த சிவமெய்யே என்றும், சிறப்புடைச் செய்கையனே என்றும் உன்னை உன் திருவருளால் ஆணவமற்ற நல்லாரே உள்ளவாறு நாட ஒண்ணும் என்றும், ஏனையார்க்கு நாட ஒண்ணா தென்றும் ஓதி வழிபடுக. துஞ்சுதல் இறத்தல். துஞ்சொத்த காலத்து என்பது இறப்பினையொத்த துன்பம் நேர்ந்தகாலத்தும் என்க. காலத்தும் என்னும் உம்மை செய்யுட்டிரிபால் தொக்கது. விஞ்சத்துறைதல்: தத்துவங்கடந்து நிற்றல் விகிர்தன்: வேறுபட்ட செய்கையன்; மாறில் செய்கையன்; சிறப்புடைச் செய்கையன் (1756): நஞ்சு - ஆணவம். (அ. சி.) எனைத்தோர் அகிதமும் - எவ்விதமான துன்பமும். துஞ்சொத்த காலத்து - மரணம் நேர்ந்தபோது. விஞ்சத்து - தத்துவங்கள் கடந்து. நஞ்சு - ஆணவம். (15)
1. அங்கித்தம். சிவஞானசித்தியார், 10. 2 - 4. " எனைத்தானும். திருக்குறள், 317. " தன்னைத்தான் காதலன். திருக்குறள், 209.
|