(ப. இ.) துரியப் பரியாகிய அப்பால் முடிவின்கண் இருந்த ஆருயிரை எவற்றிற்கு மேலாம் திருவைந்தெழுத்தை எண்ணுமாறு செலுத்துபவன் சிவன். திருவைந்தெழுத்தை இடையறாது எண்ணினால் நரிகளையொத்து நம்மை வஞ்சித்துக்கொண்டு தம்வழி இழுத்துச் செல்லும் பொறி புலன் கலன்களை அடக்கியருள்வன் சிவன். இதுவே அவற்றைத் துரத்துவதென்பதாகும். பின் இறைபணியாகிய சிவத்தொண்டினின்று சிவனுக்கு அடைக்கலம் என்னும் அடைக்கலமொழி தோன்றும். அடைக்கலமொழி - ஓலம். (அ. சி.) துரியப்பரி - துரிய அதீதம் வியாக்கிரம் - அஞ்செழுத்து எண்ணுதல். நரிகள் - கன்மேந்திரியங்கள் 5; ஞானேந்திரியங்கள் 5; அந்தக் கரணங்கள் 4; ஆக நரிகள் 14ஆம். (8) 2238. நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின் மன்றனு மங்கே மணஞ்செய்ய நின்றிடும் மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும் அன்றே யிவனும் அவன்வடி வாகுமே. (ப. இ.) நனவின்கண் ஏற்படும் அப்பால்நிலை சாக்கிரதுரியம் எனப்படும். அந் நிலையில் திருவைந்தெழுத்து ஐந்தனையும் அகநிலை. ஐம்பெருமன்றமாகக் கொண்டு சிவபெருமான் அம்மைகாண அருட் பெருங்கூத்து ஆடுகின்றனன். இதுவே அகக் கூத்தாகும். இவ் வகக் கூத்துச் சொல்லுலகைப்பற்றி நிகழ்கின்றது. இதுபோல் பொருளுலகைப் பற்றி நிகழும் புறக்கூத்தும் ஐந்திடமாகும். அவை முறையே திருஆலங்காடு, திருத்தில்லை, திருக்கூடல், திருநெல்வேலி, திருக்குற்றாலம் என்பன. இவற்றின்கண் அமைந்துள்ள மன்றங்கள் முறையே மணி, பொன், வெள்ளி, செம்பு, மண் என்ப. இவற்றிற்கு முறையே ஒருபுடையொப்பாகச் 'சிவய நம' என்னும் திருவைந்தெழுத்தாகும். இவ்வாறாக அகம் புற அம்பலங்களைக் கொண்டு நடிக்கும் அம்பலவாணரை மன்றன் என ஓதியருளினர். இவற்றை நினைவுகூர ஒரு வென்பாவில் தருகின்றாம்: "மேலாம் 'சிவயநம' மேவுமணி பொன்வெள்ளி பாலாம்செம் போடுமண் பற்றல்போல்-மேலாம் அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல் தவநெல்லை குற்றாலந் தான்." அத்தகைய மன்றனும் அப்பால்நிலைக்கண்ணே ஆருயிருடன் வேறற மீளாக்கலத்தலாகிய மணஞ்செய்ய நின்றருள்கின்றனன். அச் சிவபெருமானாகிய மன்றன் மணஞ்செய்தலாகிய கலத்தலைப் புரிதலும் மாயை முதலிய மலங்கள் மறைந்திடும். மறையவே அப்பொழுதே ஆருயிர் பேருயிராம் சிவன் வடிவமாகும். மணம் - கலப்பு. (அ. சி.) மன்றன் - கூத்தப்பிரான். மணஞ்செய்ய - கலக்க. மன்றன்.....மறைந்திடும் - சிவ சக்தி சேர மாயை மறைந்துவிடும். (9) 2239. விரிந்திடிற் சாக்கிர மேவும் விளக்காய் இருந்த விடத்திடை யீடான மாயை பொருந்துந் துரியம் புரியிற்றா னாகுந் தெரிந்த துரியத் தீதக லாதன்றே.
|