2254. ஐந்துஞ் சகலத் தருளாற் 1புரிவற்றுப் பந்திடுஞ் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி யிருள்போலும் ஐம்மல மாறுமே. (ப. இ.) ஆருயிர்கள் திருவருளால் ஐம்மலத் தன்மைகளை உணர்ந்து அவற்றினின்றும் நீங்குவதாகிய பற்றறுதியை உற்றுநிற்பதே துறவாகும். அதுவே தூய்மை. அதுவே தெளியக் காண்டல். அதுவே சுத்தி. அதுவே புரிவு. அப் புரிவினைப் பொருந்தி வந்திடும் பதைப்பு நிலையினில் நந்தியாகிய மேனிலை நாட்டம் உண்டாகும். அந் நாட்டத்து முன்னிலையில் சுடர் முன்னிலையில் அந்தியிருள் முந்தியடங்குவதுபோல் ஐம்மலமும் அடங்கும். அடங்கும் - அறும்; அறுதல், இருந்தும் பயனிலவாதல். (25) 2255. ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை யுள்ளுறல் சுத்தமே. (ப. இ.) ஆருயிர்கட்குப் பருவுடலாயமைந்த உடல்மெய் இருபத்து நான்கும், இவற்றுடன் கூடிச் சிறப்பு வகையான் நிற்கின்ற ஆள் ஒன்றும் ஆகிய இருபத்தைந்து மெய்களும் உடலென்ப. ஆள் - புருடன். ஆளின் பொதுநிலைமை ஊழி ஊழ் உழைப்பு உணர்வு உவப்பு என்னும் தூவா மாயையினினாம் ஐம்போர்வை பெற்று நிற்றல். இவ் விரண்டும் முறையே உழைப்பார் கருவி கைக்கோடலும் கச்சரையாத்தலும் ஒக்கும். உழைத்தற் குடையடுத்தல் உன்னுபொது ஆளாம், விழை கருவி கோடல் சிறப்பு; என நினைவுகூர்க. மட்டுப் பகுதியாகிய மூலப் பகுதியும், ஏழு மெய்களுடன் கூடிய தூவாமாயை என்னும் உணர்வுமெய்யும் ஆகிய இவையனைத்தும் நிலையாமையுடையன, திருவடிசேர்வதற்குக் கருவியாவன என உணர்த்தும் தூமாயை ஐந்தும் திருவருளால் ஆருயிர் அறிவின்கண் காணப்படுதல் வேண்டும். காணவே, தான் இவற்றின் வேறெனவும் இவற்றால் எய்தும்படியுள்ளது தனக்கு ஏதும் இன்றெனவும், உள்ளத்துக் கொள்ளல் ஏற்படும். இவற்றிற்கு மேல்நிலையே உய்யும்படியமைந்த ஒப்பில் ஒருநிலை என்பது விளங்கும். அந் நிலையினை அருளால் உள்ளுதலே ஆவித் தூய்மையாம் புரிவு நிலையாகும். புரிவு - சுத்தம். கச்சு: அரைப்பட்டிகை. (அ. சி.) ஐயைந்து - ஆன்ம தத்துவம் 24-ம் புருட தத்துவமும் ஆக 25. மட்டுப்பகுதி - மூலப் பிரகிருதி. (26) 2256. நின்றான் அருளும் பரமுமுன் னேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியுஞ் சென்றா னெனைவிடுத் தாங்கிற்செல் லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானன்றே.
(பாடம்) 1. புரிவுற்றுப்.
|