காரணமான ஆதியாற்றலையுடைய பழையோன். எவ்வகை அளவைகளானும் அறியவொண்ணா நிலைமையில் என்றும் பொன்றாது இயற்கையாக நின்றோன். அவனே அருளாட்சிச் செல்வன். அவனே ஆருயிர் அனைத்திற்கும் பொதுவுடைமையாகப் புகலப்படும் பேருலகங்களாகிய புவனங்களெங்கணும் நிறைந்துநிற்கும் பொருவில் பெரும் பொருள். எட்டும் - நிறைந்துநிற்கும். என்னுடன் முப்பாலாயிருந்து 'என்னைப் படைத்துத் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு' பாடுவித்த (152, 148) இத் தனிப்பெரும் செந்தமிழ்த் திருவாகமம் என்னும் இத் 'திருமந்திர மாலையினை' அறிபவன் அச் சிவபெருமானே. அவனே திருநந்தி. அவனே எங்கள் ஆருயிர் இன்றமிழ்ப்பெருமான். இத் திருப்பாட்டுக் கேட்பித்தல் அருளுகின்றது. முப்பால்: ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கும் மூன்று நிலை., (அ. சி.) அதுவறிவானவன் - அச் சீவர்களின் அறிவுருவானவன். ஆதிப் புராணன் - தலைமையுடைய பழையோன். எது அறியா வகை - எப் பிரமாணத்தாலும் அறியாவகை. பொதுவதுவான - பொதுவான. புவனங்கள் - உலகங்களில். எட்டும் - வியாபித்தவன். இது அறிவான் - யான் கூறும் இதனை அறிபவன். (18) 3000. நீரும் நிலனும் விசும்பங்கி மாருதந் தூரும் உடம்புறு சோதியு மாயுளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை ஊருஞ் சகலன் உலப்பிலி தானன்றே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் நீரும் நிலனும் விசும்பும் தீயும் காற்றுமாய் விரவி விளங்குகின்றனன். அவன் எங்கணும் தூருபோன்று வெளிப்பட்டுத் தோன்றும் காரணமுமாய் நிற்கும் மெய்ப்பொருள் மேலோன். வேர் மறைந்த காரணம். மரமாகிய காரியத்தைத் தாங்கிநிற்கும் காரணங்கள் இரண்டுள. அவற்றுள் ஒன்று வெளிப்படாக் காரணம் அதுவேர். மற்றொன்று வெளிப்படுகாரணம், அது தூர். அதுபோல் ஆருயிர்கட்கு வெளிப்படுகாரணம் ஈன்றார். வெளிப்படாக் காரணம் ஆன்ற சிவபெருமான். இவற்றை ஒருபுடையொப்பாக முறையே பொருண்முதற் காரணம் வினைமுதற் காரணம் எனவுங் கூறலாம். உடம்பகத்து அறிவொளியாய் விளங்கும் ஆருயிர்களுடன் தனிப்பெருந் தலையளியாற் கலந்து அவ்வுயிர்களாகவே நிற்பவனும் அவனே. எல்லாவற்றுடனும் இவர்தந்தூரும் எழில்சேர் விழுமியானும் அவனே. என்றும் பொன்றா உலப்பிலா ஒருவனும் அவனே. பெரும்பூதங்களின் முறைவைப்பு ஒருபுடை யொப்பாக 'நமசிவய' என்னும் நற்றமிழ்த் திருவைந்தெழுத்துத் திருமந்திரத் திருக்குறிப்பாகும். "நாட்டும் 'நமசிவய' நன்னீர்மண் விண்தீகால், கூட்டும் 'சிவயசிவ' கூர்ந்து" (2550) என்பதனை இதனுடன் நினைவுகூர்ந்து இன்புறுக. (அ. சி.) தூரும் உடம்பு - பஞ்சபூத காரியமாயுள்ள உடம்பு. உறும் சோதி - சீவனில் உறும் சோதி. ஊறும் சகலன் - எவற்றிலும் வியாபித்தவன். உலப்பிலி - நித்தியன். (19)
|