385
 

பிரிவின்றி எய்தும். மகர நிலையாகிய மனத்தின்கண் விளங்கும் நந்தியாகிய சிவம் என்னும் முன்னின்று வழிப்படுத்தும். எம் தந்தையாகிய சிவபெருமான் புரியும் அருளிப்பாட்டை எச்சொல்லால் எடுத்து இயம்புவேன். உவ்: நடு இடத்தைக் குறிக்கும் அடையாளம்.

(அ. சி.) பிரணவத்தின் உச்சரிப்பைக் குறிக்கின்றது இப் பாடல்.

(40)

934. நீரில் எழுத்திவ் வுலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.1

(ப. இ.) 'பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும்' உலகவர்கள் நீர் மேல் எழுத்துப்போல் நிலையில்லாத உலகியற் சுட்டுப்பொருள்களையே உணர்வர். திருச்சிற்றம்பலமாகிய பரவெளியில் ஒலிக்கும் ஓங்கார நிலை எழுத்தை உள்ளபடி ஒலித்துணர்வாரில்லை. இவ்வோங்கார எழுத்தை உணர்கின்ற மெய்யடியார்கள் தலையெழுத்தென்று சொல்லப்படும் ஊழை உள்ளத்துணரார். (அவ்வூழ் உடலூழாய்க்கழியும்.)

(அ. சி.) நீரில் எழுத்து - நிலையற்றது. உலகார் அறிவது - உலகத்தில் பெரும்பாலோர் உச்சரிப்பது. வானில் எழுத்து - ஆகாய தத்துவத்தினிடத்து முதல் முதல் தோன்றிய பிரணவம். யாரிவ் வெழுத்தை யறிவார் - ஒருவரும் அறியாதவர். அவர்கள் - அப்படி அறியமாட்டாதார். ஊனில் எழுத்து - ஊன் அகத்துள்ள நெஞ்சத்தினிடம் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்.

(41)

935. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூல நடுவுற முத்திதந் தானே.2

(ப. இ.) உயிர்ப்பு ஆறுநிலைக்களங்களுள் நடுவாகிய நெஞ்சத்தின் கண்நிற்ப, பெருவெளியில் தோன்றிய ஓங்காரம், ஐம்பத்தோரெழுத்துக் களாலாகிய சொல்மாலையின் நடுமணியாக விளங்கும். மேலும் மறைகளின் நடுவாக விளங்கும் திருவைந்தெழுத்தே சிவமூல மந்திரமாகும். அதனை இடையறாது நாட வீடுபேறாகும். நாட - சிந்திக்க.

(அ. சி.) காலை நடுவறக் காயத்தில் - உடம்பில் இருகாலின் இடுக்கின் நடுவுதொட்டு உள்ள மூலாதாரம் தொடங்கி ஆறு ஆதாரங்களில். அக்கரமாலை...ஆவன - ஐம்பத்தோரக்கரங்களும் மாலைபோன்று உள்ளன. மேலும்...மூலம் - அம் மாலையில் பதக்கங்கள் போன்று உள்ள ஆதாரத்தானங்களின் நடுவில் இருக்கும், வேதத்தில் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து.

(42)


1. நாமல்ல. சிவஞானபோதம், 10. 2 - 1.

2. மந்திர. சம்பந்தர், 2. 144 - 2.