1578. மந்திர மாவதும் மாமருந் தாவதுந் தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ் சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே.1 (ப. இ.) எந்தைபிரானாகிய அம்மையப்பரின் இணையடிகளே உடல் நோய், உளநோய், ஊறு, பகை, பிறப்பு முதலிய எல்லாவகைத் துன்கங்களையும் அறவே அகற்றும் திறமார் மந்திரமாகும்; பெரிய நன்மருந்துமாகும்; நூலுணர்வுமாகும்; உயர்ந்த இன்பமூட்டும் ஒப்பிலா ஒளி நிலங்களுமாகும்; உயிர், உணர்வு, உள்ளம், உடல், உடை, உறையுள் ஆகியவற்றிற்கு அழகினைத் தருவதுமாகும்; திருவடி சேர்க்கும் தூய நெறியுமாகும். திருவடி என்பது, 'சிவயநம' இதன்கண் ஆவியின் அடையாளமாகிய 'ய' கரத்தின் முன்னும் பின்னும் உள்ளனவாகிய வகரமும் நகரமும் அண்ணல் திருவடி இரண்டுமாகும். வகரம் வனப்பாற்றல். நகரம் நடப்பாற்றல். வகரம் சிவத்துடன் கூட்டும். நகரம் உடலுடன் கூட்டும். வகரம் வலது திருவடி. நகரம் இடது திருவடி. (அ. சி.) இம் மந்திரக் கருத்தைத் திருஞானசம்பந்த சுவாமிகள் எடுத்து ஆண்டுள்ளார். திருவடி ஞானமே எல்லாமாம் என்பது இம் மந்திரக் கருத்து. (15)
3. ஞாதுரு ஞான ஞேயம் (காண்பான் காட்சி காட்சிப்பொருள்) 1579. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதனிலை நிற்கவே2 நீங்கா அமுத நிலைபெற லாமே. (ப. இ.) கட்டிலும் ஒட்டிலும் ஆருயிர்களை என்றும் விட்டு நீங்காத அருளால் உணரப்படும் பொருளாகிய முழுமுதற் சிவத்தின் விழுமிய பேரின்பத்தே அழுந்தி நிற்கப் புல்லுமலமாகிய ஆணவப் பசை தொடராது. ஒருகால் தொடர நேரினும், திருவருள் துணையால் ஆங்காரம் நீங்கி அத் திருவருள் நினைவாகவே மெய்யடியார் நிற்பர். நிற்கவே அவர்கட்குப் பேரின்பப் பெருவாழ்வு நீங்காது நிலைபெறும். பசை - வாசனை. அமுதம்-பேரின்பம். ஞேயம் - உணரப்படும் பொருள். (அ. சி.) ஞாதுரு - அறியும் ஆன்மா. ஞானம் - அறியும் அறிவு. ஞேயம் - அறியப்படு பொருள் பாங்கான பாசம் - சகச மலம், ஆணவம். ஆங்.....கவே - ஆங்காரத்தை அடக்கி மவுனம் சாதிக்கவே. நீங்கா அமுத நிலை - அழியாத இன்ப நிலை. (1)
1. மந்திர. சம்பந்தர், 2. 66 - 1. " பேரா யிரம்பரவி. அப்பர், 6. 54. 8. இங்குளி. சிவஞானபோதம். 10. 2 - 3.
|