அனைவர்க்கும் ஆருயிர்நாதன். அவனே நம் செம்பிரான். இவ் வகையாக நினைந்து திருவைந்தெழுத்தால் தொழத் தொடங்குங்கள். தொடங்கிச் சாமன்றுவரையும் நாடொறும் விடாது தொழுங்கள். என்னை, 'தொழுவார்க்கே அருள்வது சிவபெருமா'னாதலான் என்க. இதனையே நற்றாள் தொழாவிடின் உற்றபயன் ஏதுமின்றென்றனர் பெருநாவலர். அங்ஙனம் தொழாவிட்டால் அஞ்சாகிய ஐம்புலனும் நம்மைப் பொருந்தி அது விரும்பிய இடத்தே நாம் சென்று அதனால் ஆட்டுண்டு பாகனில்லா யானைபோல் அழிவெய்துவோம். 'நஞ்சு' என்பதற்கு உள்ளம் நெகிழ்ந்து நைந்து என்றதும் ஒன்று. (அ. சி.) நஞ்செம்பிரான் - நம் + செம் + பிரான், நம்முடைய செம்மையான கடவுள். அஞ்சு உற்றுவிட்டது - ஐம்புலனால் ஆட்டுண்டு வருந்துவது. (11) 2057. மிருக மனிதர் மிக்கோர் 1பறவை ஒருவர்செய் தன்புவைத் துன்னாத தில்லை பருகுவ ரோடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமரு மாதவஞ் சேர்ந்துணர்ந் தாரே. (ப. இ.) முன்புள்ள உழுவலன்பின் தொடர்ச்சியினால் விலங்குகள் மனிதர் உயர்ந்தோர் பறவைகள் முதலிய அனைத்துயிர்களும் ஒப்பில்லாத ஒரு முழுமுதலாகிய சிவபெருமானிடத்து அன்புசெய்து நினைக்கின்றன. அன்புசெய்து நினையாத உயிர்களே இல்லை. நிலவுலகில் 'மக்களாய்ப் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார்' அடியிணையைத் தொழுதல். அப்படித் தொழுவாரே பிறவிப் பெரும்பயன் கொள்வார். அவர்கள் சிவபெருமானை அளவிறந்த அன்பினால் பருகுவாரொத்து இன்புறுவர். கிளர்ச்சியினால் கற்றி ஓடுவர். அத்தகையார் அழியாப் பெருந்திருவாம் சிவபெருமானின் திருவடியிணையினைப் பொருந்துவதற்கேற்ற பெருந்தவமாம் நானெறியில் இடையறாதொழுகும் நல்லோராவர். அவர்களே அடியார் இணக்கம் சேர்ந்தோராவர். (அ. சி.) பார்ப்பயன் - பூமியில் பிறந்ததால் உண்டாம் பயன். திருமரு மாதவம் - திருவருள் கூடும்படியான பெருமைமிக்க தவம். (12) 2058. நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாருந் தொடர்ந்தறி வாரில்லை ஆதி 2பயனென் றமரர் பிரானென்று நாதியே வைத்தது நாடுகின் றேனே. (ப. இ.) நீதியில்லாதார் பெற்ற செல்வம் தமக்கும் தம் வழியினுள்ளார்க்கும் சான்றவர்க்கும் பயன்படாது தீயார்க்கே பயன்படும். அதுபோல் கிடைத்தற்கரிய பொன்னினும் மிக்கது மக்களுடம்பு. இவ்வுடம்பினால் உள்ள பயன் உடம்பினுள் உத்தமனைக் காணுதல்.
1. புத்தியினாற். அப்பர், 6. 84 - 6. " அன்பொரீஇத் தற்செற். திருக்குறள், 1009. (பாடம்) 2. யயனென்.
|