478
 

(ப. இ.) முடிவின்கண்ணும் மேலாக விளங்கும் அம்மை, உயிரெழுத்துக்கு உயிர்ப்புநல்கும் சிகையாகிய நாதத்துடன், பேரின்பம்தரும் அன்பியாவள். அன்பி - மோகினி. அழியாத திருவடிச் செல்வத்துடன் முதற்கண்வைத்த முதல்வியாவள். சொல்லப்படும் கூறுடையதானவை ஓமெனும் எழுத்தாம். அவ்வெழுத்தின்வழிப் பயில்வார் உயிர்மார்க்கம் செல்பவராவர்.

(அ. சி.) மோனையில் - முதலில்.

(72)

1203. மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய வரியா ளவளாகும்
வாக்கு மனமு மருவியொன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

(ப. இ.) உயிர்களின் நிலைமைக்கு ஏற்பப் பல நெறிகளையும் வகுத்தருளிய மனோன்மனி மங்கலக் குணத்தினையுடையாள். அவள் யார்க்கும் தங்கள் அறிவு முனைப்பால் அறிதற்கு ஒண்ணாதவள். மொழியும் நினைப்பும் ஒன்றாய் அடங்கிக் கண்ணால் பார்க்கும் தன்மையும் நீங்கிய பெருமையுடையவர்களுக்கு அவர்களது அறிவுக்கு அறிவாய் - நுண்ணறிவாய் விளங்குவள். நுண்ணறிவு - அறிவுக்குள் அறிவு.

(அ. சி.) மார்க்கங்கள் - தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம்.

(73)

1204. நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்
செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.1

(ப. இ.) நுழைபுலன் மாந்தராகிய மெய்யடியார்கட்குத் திருவருளம்மை அறிவுக்கு அறிவாகிய நுண்ணறிவாயிருப்பள். அவர்களறிவு பிரானறிவுக்குப் பின்னாகநிற்கும். அதுவே பெருவழியாகும். அதுவே செல்லும் நெறியுமாகும். சிவ நிலையை எய்துவார்க்குத் தலைவனெறி யாவதும் அதுவே. அதுவே அறிவுநெறியாகிய சன்மார்க்கமாகும். சன்மார்க்கம் (சத்+மார்க்கம்) உண்மைநெறி; மெய்ந்நெறி.

(74)

1205. சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந்
துன்மார்க்க மானவை எல்லாந் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ்
சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.

(ப. இ.) அறிவுநெறியாக அமைந்தமுறையும் தீநெறியானவை எல்லாவற்றையும் ஓட்டிவிடும். அம்முறையே நடக்கும் நல்லொழுக்கத்தால் நன்னெறி வந்து கைகூடும். இந்நெறிக்கு முதல்வியும் திருவருளம்மையேயாகும். மார்க்கம் - முறைமை; ஒழுங்கு.

(75)


1. துன்பம். அப்பர், 4. 21 - 9.