2657. நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரானென்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரணென்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற 1லாகுமே. (ப. இ.) திருவைந்தெழுத்தின் சிறப்போர்ந்து அப் பெரும் பொருள் மறையினை நீங்கா நினைவுடைய தூயராய்க் கணித்தும் வாயால் முழுமுதற் பெருமான் சிவன் என்று வாழ்த்தியும் வருவோர் செந்நெறிச் செல்வராவர். அவர்கள் துஞ்சும் போழ்து உன் துணைத்தாள் ஒன்றே புகலென்று அடைக்கலம் புகுவர். அதனால் அவர்கள் திருவருள் உருவாகச் செப்பப் பெறும் மேகங்கள் தவழும் திருவெள்ளி மலைமீது உறைந்தருளும் திருவைந்தெழுத்தால் பெறப்படும் முழுமுதற் சிவபெருமானின் திருவருள் பெற்று உய்வர். அஞ்சில் இறை - அஞ்சுதலில்லாமல் செய்தருளும் சிவபெருமான் என்றலும் ஒன்று. (அ. சி.) வடவரை - கயிலை. அஞ்சில் - அஞ்சுதல் இல்லாத. (9) 2658. பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றஞ் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றுங் கீழொடு பல்வகை யாலும் அராமுற்றுஞ் சூழ்ந்த அகலிடந் தானே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானின் திருவுள்ளத்தால் காரியப்படும் குண்டலினி என்று சொல்லப்படும் தூமாயை பாம்பென உருவகிக்கப்படும். அத்தகைய அரவினை ஆதிசேடன் என்ப. ஆதிசேடன் என்பது ஆதியாகிய திருவருளால் காரியப்படும் தூமாயை என்ப. அக் குண்டலினியால் சுமக்கப்படும் விரிந்த அகலிடத்துள்ளார் அனைவராலும் பராவப்படும் முழுமுதல் சிவபெருமான் ஆவன். பலவகையாலும் ஆராய்ந்து பார்க்கில் சிவபெருமானே முழுமுதலாவன். அச் சிவபெருமான் ஆருயிர் உய்தற்பொருட்டு அருளிச்செய்த பொருள்மறை திருவைந்தெழுத்தாகும். அத் திருவைந்தெழுத்தின் பெருமை உணராதவர்கள் ஆணவவல்லிருளாகிய இராவினை மாற்றும் வன்மையுடையவர் ஆவரோ? அந்தோ அறிவிலா ஏழை மனிதராக இருக்கின்றனரே! சேடன்: பெருமையுடையவன்; சேடு - பெருமை. ஏனைமந்திரங்களாகிய மறை அனைத்தும் புகழ்மறை என்று சொல்லப்படும். (அ. சி.) ஐந்து - அஞ்செழுத்து. இராமாற்றம் - அஞ்ஞானத்தைக் கெடுத்தல். பரா - பரவு. அராமுற்றும் சூழ்ந்த - ஆதி சேடனால் தாங்கப்படுகின்ற. (10)
1. நெஞ்சம். அப்பர், 5. 27 - 3.
|