37
 

(ப. இ.) செந்நெறிக்கண் பொருந்திய உலகிற்குத் துணையாகிய அவ் வந்தணர் வேள்வியுட் சிறந்த சிவ வேள்வியினை ஆருயிர்தோறும் அணைந்து வழித்துணையாக நிற்கும் சிவபெருமானை முதன்மையாக வைத்துப் புறத்தே புரிவர். அவர் அவ் வேள்வியினை யொத்து உயிர்ப்புப் பயிற்சியால் அகத்து வேள்வி செய்யும்போது, துணையாய்ப் பொருந்தும் சிவபெருமான் வெளிப்பட்டு விளங்கித் தோன்றுவன். அந் நிலையே தூநெறியாகிய நன்னெறி என்ப.

(3)

88. தானே1 விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே2 விடப்படு மேதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்3
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே.

(ப. இ.) செந்தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட நான்முகன் முதலாயினார்க்கும் புண்ணியப் போகனாயுள்ளவன் சிவன். அவன் திருவடியை அன்றி வேறொன்றினையும் எண்ணாது அதனையே எண்ணி ஓ மறைமொழிந்து ஆகுதி செய்யின், அவ்வாகுதிப்பயனால் யான் எனது என்னும் இருவகைப் பற்றும் தானே விடும். அங்ஙனமின்றி என்னால் விடப்படும் தன்மையதோ?

(அ. சி.) பற்று இரண்டு - யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்றுக்கள்.

(4)

89. நெய்நின் றெரியும்4 நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மத்தின மாம்என்றுஞ்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.

(ப. இ.) புறவிருளைப் போக்குதற்கு அகலும், நெய்யும், திரியும் தீயும் ஒன்றுகூடி எரியும் விளக்கைப்போல், அகத்தேயுள்ள மை போன்ற ஆணவ வல்லிருள் சிவனார் திருவடியுணர்வால் அகலும். அத்திருவடியுணர்வு திருவைந்தெழுத்தை இடையறாது எண்ணும் பொருள் மறையால் வாய்க்கும். அவ் வுண்மை உணர்வார்க்கு இருண்மலம் தானே அகலும். அத்தகைய நன்னாள் செய்தற்குரிய செந்நெறியில் நிற்கும் பொன்னாளாகும். அந் நெறியால் பெறப்படும் அழியாச் செல்வம் திருவடிப் பேறு. அது மலவிருளோட்டும் பேரறிவுச் சுடராம் தீயாகும்.

(அ. சி.) மை - மலம். நெய் - அறிவு, ஞானம்.

(5)

90. பாழி அகலும் எரியுந் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.


1. (பாடம்) தாமே. 2. (பாடம்) நாமே.

3. நாகத்தணையானு. சம்பந்தர், 1. 85 - 9.

4. செய்ஞ்ஞின்ற. அப்பர், 4. 80 - 5.