922
 

2274. கறங்கோலை கொள்ளிவட் டங்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தின் மலத்தினில் நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்து
இறங்கா வுயிரரு ளாலிவை நீங்குமே.

(ப. இ.) ஆருயிரானது மலப்பிணிப்பினால் நன்மை தீமைகளைப் புரிகின்றது. அவ் விரண்டும் அறம்பாவம் ஆக வளர்ந்து முதிர்ந்து விளைகின்றது. விளைந்து இன்ப துன்பப்பயன்களை முறையே தனித்தனி நுகரும் ஒளியுலகு இருளுலகங்களிலும் ஒருங்கு நுகரும் நிலவுலகங்களிலும் புகுமாறு செய்து பயன் அருத்துகின்றன. இங்ஙனம் இரு வினைப்பயன் நுகர்வான் அவ் வுயிர்கள் மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் வரும் இடையறாநிலைக்குக் கறங்கோலையாகிய காற்றாடி, கொள்ளி சுற்றுவதாலேற்படும் வட்டம், கடலில் எழும் அலை, மத்தால் கடையப்படும் தயிர் முதலியன ஒப்பாகும். இங்ஙனம் மாறிமாறி வருந்தும் உயிர்களின் வருத்தங்கண்டு அவற்றைச் சிவபெருமான் திருவருளால் நீக்கற் பொருட்டுச் செவ்விவருவித்து நீக்கி அருள்கின்றனன்.

(அ. சி.) கறங்கு ஓலை - காற்றாடி கொள்ளிவட்டம் சூழ்ந்து - (கார்த்திகை மதியில் பிள்ளைகள்) எரிகொள்வது சூழ்ந்து. நிறம் சேர் - அழகிய. இரங்கா உயிர் - வருந்தும் உயிர்.

(10)

2275. தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமுமப் பாச பேதங்களும்
ஆன குணமும் பரான்மா வுபாதியும்
பானுவின் முன்மதி போற்பட 1ராவே.

(ப. இ.) திருவருட்பேற்றால் ஆருயிர் தானே சிவமாம்தன்மை எய்தும். எய்தத் தொன்மையான மலமும் அம் மலத்தைப்போக்க அருளார் சேர்க்கப்பட்ட பாச வேறுபாடுகளுமாகிய ஐம்மலங்களும் நீங்கும். அதனால் ஏற்படும் குணங்களாகிய தீமைகளும் அகலும். உயிர்த்தன்மைத் தடையாகிய பரான்மாவுபாதியும் நீங்கும். இவை முற்றும் உடன் ஒருங்கு அகல்வதற்கு ஒப்பு ஞாயிற்றின்முன் திங்கள் நீங்குவதாகும். நீங்குதல் என்பது அடங்குதல். அஃதாவது செயலறுதல்.

(அ. சி.) பாசபேதம் - ஐவகை மலம். பரான்மா - பசுத்தன்மை நீங்கிய ஆன்மா.

(11)

2276. நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனுஞ் சோமனும் அங்கே அமருந்
திருத்தக்க மாலுந் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து 2ளாரே.

(ப. இ.) உலகமும் உடலும் ஒப்பெனக் கூறும் உண்மையான் உடலகத்தும் நிலமுண்டு; நீருண்டு; நெருப்புண்டு; காற்றுண்டு; வெளி


1. வெய்யோன். சிவஞானபோதம், 5. 2 - 2.

2. பாராதி. உண்மை விளக்கம், 7.